கேரளாவில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த சில நாள்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே கள்ளாடி பகுதியில் உள்ள அனக்காம்போயில்-கள்ளாடி-மேப்பாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் (மீனாட்சி பாலம் அருகே) ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலச்சரிவில் சிக்கியிருந்த 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 7 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இயந்திர இயக்குநரான சந்திரபான், பீகாரைச் சேர்ந்த சிவில் ஃபோர்மேன் விகாஷ் குமார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அன்மோல் என அடையாளம் காணப்பட்டனர்.
மேலும், மாயமான 5 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேடுதல் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. மோப்ப நாய்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட நவீன உபகரணங்களின் உதவியுடன் நான்கு தனித்தனி குழுக்கள் மண் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடி வருகின்றன. கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் நீடிக்கிறது. பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்புப் பணிகள் தொடரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். NDRF, தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் அறிவிப்பு:
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த பிறகே சுரங்கப்பாதைப் பணிகள் தொடரும் என கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்த பிறகே பணிகள் தொடங்கும். நிலச்சரிவு தொடர்பாகவும், விதிகளை மீறி பணிகள் நடந்ததா எனவும் இரு தனித்தனி விசாரணைகள் நடைபெறும். வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் சதீசன் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஆய்வு
இந்நிலையில் இன்று நிலச்சரிவால் ஏற்பட்ட கள்ளாடி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் சதீசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னணி
இந்தச் சம்பவம் சுமார் 265 மி.மீ. மழை பெய்ததால் ஏற்பட்டது. சுரங்கப் பணியில் வெட்டிய மண்ணை அருகிலேயே குவித்து வைத்திருந்தது பெரும் சரிவுக்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இது இயற்கை நிலச்சரிவு மட்டுமல்ல, மனிதத் தவறும் கலந்த சம்பவம் என அமைச்சர் சித்திக் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
