புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Ration Card

தமிழகத்தில் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது 2 கோடியே 28 லட்சத்து 41,335 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், புதிய ரேஷன் கார்டு கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆன்லைன் மூலம் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். புதிய அரசு பதவியேற்ற பின்னரும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்ததால், பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் உருவானது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணனிடம், புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் விண்ணப்பதாரர்களில் தகுதியானோருக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் பணி முறைப்படி தொடங்கும்,” எனத் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share