ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டம் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் நேற்று(07.07.2026) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2026-ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் , தணிக்கை). மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர், ”தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் புதிய ஆட்சி பொறுப்பேற்றபின் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்கவும். வெளிப்படையான நிர்வாகத்தினை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அலுவலர்கள் பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய இருக்கை வசதியை ஏற்படுத்தி, அவர்களுடைய குறைகளை கவனமாக விசாரித்து, லஞ்சம் வாங்குவதை தவிர்த்து, ஆவணப் பதிவுகளை உடனடியாக முடித்து, அன்றைய தினமே உரிய நபர்களிடம் பத்திரங்களை ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் ” என அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை ஆய்வுக் கூட்டம் ஜூலை 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று அமைச்சர் தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், பதிவுத்துறையில் இணையவழியில் “வருகை இல்லா ஆவணப்பதிவு” (Anywhere Registration) கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இதன்மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24 x 7 x 365) இணையவழியில் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான “வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration)” நடைமுறை 17-08-2026 முதல் கீழ்க்கண்ட ஆவணங்களைப் பொறுத்து கட்டாயமாக்கப்படுகிறது.
அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)
ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat)
1. பதிவுத்துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை (Login) தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.
3. ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
4. இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.
5. ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.
6. சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண ரசீது சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும்.
7. பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
8. பதிவுச்சட்டம்.1908-ல் விதி 32,52 மற்றும் 69-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு புதிதாக இணைய வழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டு. இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
9. இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஒர் உதவி மையம் செயல்படும்.
தொழில்நுட்ப தேவைகள்
1. இணைய இணைப்பு
2. ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல் 0 & எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப் படலம் கவரும் கருவி
3. புகைப்படக்கருவி (Webcam)
இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள முடியும்.
இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும்.
மேலும், அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு பதிவுப் பணிகள் விரைவாக நடைபெறும். அதேவேளையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் பதிவுச் சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும்.
இக்கூட்டத்தில் வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் ஜெ. குமரகுருபரன், பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
