25% ஊதிய உயர்வு: டாஸ்மாக் ஊழியர்கள் அதிருப்தி!

Published On:

| By Kavi

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 7) மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர், “டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. இதுவரை 500 ரூபாய் 750 ரூபாய் என்ற வகையில்தான் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர்கள் வாங்கும் ஊதியத்தில் 25 சதவீதம் ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.

இதன் மூலம்,ஊழியர்களுக்கு மாதம் ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும்.

ADVERTISEMENT

அதன்படி, உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.14,340-ல் இருந்து ரூ.17,925-ஆக உயர்த்தப்படுகிறது.

விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.15,530-ல் இருந்து ரூ.19,413-ஆக உயர்த்தப்படுகிறது.

ADVERTISEMENT

மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.17,850ல் இருந்து ரூ.22,313-ஆக உயர்த்தப்படுகிறது.

இதனால், அரசுக்கு 110.74 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

டாஸ்மாக் ஊழியர்களின் மொத்த ஆண்டு ஊதியச் செலவு ரூ.553.72 கோடியாக உயர்கிறது. இந்த ஊதிய உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும்.

அதுபோன்று டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் குடும்பத்தினருக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்கப்படும்” என்று அறிவித்தார்

ஆனால் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “இந்த அறிவிப்பானது தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை இக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் 23 ஆண்டு காலமாக தொடர்ந்து பணிபுரிந்து ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுவதும், அரசுக்கு சொந்தமான இதர விற்பனை பிரிவுகளான அமுதம் அங்காடிகள், நியாயவிலை கடைகள், ஆவின் பாலகங்கள், கோஆப்டெக்ஸ் துணி கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் பஞ்சபடியும் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுவதும் அரசு தனது நிறுவன ஊழியர்களிடையே மாற்றந்தாய் மனபான்மையோடு அணுகும் போக்கு சரியல்ல என்பதை முந்தைய ஆட்சிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் தொகுப்பூதியத்தில் சிறு உயர்வை அவ்வப்போது அறிவித்தார்கள். அதனை பின்பற்றியே தவெக அரசும் தொகுப்பூதியத்தை உயர்த்தியுள்ளது.

இது ஊழியர்களின் வாழ்க்கை செலவினங்களை எந்தவகையிலும் ஈடுசெய்ய உதவாது என்பதை அரசு உணர வேண்டும்.

இந்த ஊதிய உயர்வைக்கூட ஊழியர்களின் பணி நிலைமையை கருத்தில் கொண்டு அறிவித்தாக தெரியவில்லை.

அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி என்பது பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பளத்தில் உயர்வு. இதர பணப்பயன்கள் பெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல் முந்தைய ஆட்சியாளர்களை போலவே நவீன கொத்தடிமை முறையை இந்த அரசும் தொடர்வது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

அரசு, இந்த தொகுப்பூதிய உயர்வை மறுபரிசீலனை செய்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை சம்பளத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share