பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் நடப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத வயதில் 116 வயதான மூதாட்டி நவநீதம்மாள் இந்தியாவில் மிகவும் போற்றப்படும் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க படியேறி நடந்தே சென்றுள்ளார்.
அவரது பயணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் மூதாட்டியின் மன உறுதியைக் கண்டு மக்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் நவநீதம்மாள். அவருக்கு வயது 116 என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தையான நவநீதம்மாள், நான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும். என்னை அழைத்துச் சொல்லுங்கள் என்று தனது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் மூதாட்டியின் பெண் வயிற்று பேரன் திக்பதி மற்றும் அவரது குடும்பத்தார் இரண்டு தினங்களுக்கு முன் திருப்பதிக்கு கிளம்பி வந்தனர்.
ஏழுமலையானை நடந்தே சென்று தரிசிக்க வேண்டும் என்று மூதாட்டி நவநீதம்மாள் கூறியதால் அலிபிரியிலிருந்து மலைப்பாதை வழியாக யாத்திரை மேற்கொண்டனர்.
3550 படிகள் மற்றும் ஒன்பது கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்தே மலையேறி உள்ளார் நவநீதம்மாள்.
இதனை பக்தர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனத்திற்கும் சென்றது.
இதை பார்த்து ஆச்சரியமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பக்திக்கு வயது ஏது? அதற்கு தடைக்கல் இல்லை. திருப்பதி ஏழுமலையான் மீது 116 வயது பக்தை கொண்டுள்ள நம்பிக்கையே இதற்கு சான்று”என்று பதிவிட்டிருந்தார்.
அதோடு மூதாட்டி ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தேவஸ்தான ஊழியர்கள், மூதாட்டியை தேடி கண்டுபிடித்து விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை பார்க்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும் நேற்று (ஜூலை 6) விஐபி பிரேக் தரிசனம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மூதாட்டிக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓதி, பட்டு வஸ்திரத்தை போர்த்தி, தேவ ஆசீர்வாதம் வழங்கி மரியாதை செய்தனர்.
தேவஸ்தான நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா, மூதாட்டிக்கு பிரசாதங்கள் தீர்த்தம், ஏழுமலையான் திருவுருவப்படம், லட்டு ஆகியவற்றை வழங்கி அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து மூதாட்டி பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக மூதாட்டியின் குடும்பத்தினர், ‘யாரோ ஒரு புண்ணியவான் வீடியோ எடுத்து போட்டிருக்கிறார். அது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரை சென்றிருக்கிறது. அதன் பின் எங்களை தேடி கண்டுபிடித்து அருமையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். அனைவருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.
நவநீதம்மாள் வாழ்நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் பணியில் உள்ள தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் செல்லும் வழியாக சென்று சாமிதரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அறிவித்துள்ளார்.
