கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகேயுள்ள கல்லடியில், மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் ‘அனக்கம்பொயில் – மேப்பாடி’ சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் அதிதொடர் கனமழை காரணமாக, சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் மீனாட்சி பாலம் அருகே இன்று (ஜூலை 7) திடீரெனப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் போது, பயங்கர வெள்ளப் பெருக்குடன் வந்த சேற்றுச் சகதியில் லாரி ஒன்று அடித்து வரப்பட்டதும், அதைக் கண்டு அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு உயிர் தப்பிக்க ஓடும் பதைபதைக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சுரங்கப்பாதை திட்டப் பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், தொழிலாளர்கள் பலர் மண்ணுக்குள் சிக்கினர். இதில், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் மக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனங்காடியில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF) மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். எனினும், அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, நிலையற்ற நிலப்பரப்பு மற்றும் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சவால்கள் நிலவி வருகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
நிலச்சரிவு மற்றும் தொடர் மழையைக் கருத்தில் கொண்டு, வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக விடுமுறை அறிவித்துள்ளது.
கேரள முதல்வர் உத்தரவு:
இது குறித்து கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், “மீட்புப் பணிகளைத் தாமதமின்றி ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை அமைச்சர் ஏ.பி. அனில்குமார் மற்றும் வேளாண் துறை அமைச்சர் டி. சித்திக் ஆகியோரை உடனடியாக வயநாட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளேன். மாவட்ட ஆட்சியருடனும் நிலைமை குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட்
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே, இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், மலப்புறம் மற்றும் கண்ணூர் ஆகிய அண்டை மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
