Video : தனியார் பேருந்தில் திடீர் கட்டண உயர்வு : பயணிகள் ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

நாமக்கல் ஈரோடு பேருந்து வழித்தடத்தில் தனியார் பேருந்து ஒன்று அதிக கட்டணம் வசூலித்ததால் பயணிகளுக்கும் பேருந்து நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே பேருந்து பள்ளி பாளையத்தில் நிற்காது என்று நடத்துநர் கூறியதால் மீண்டும் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

நாமக்கல் திருச்செங்கோடு ஈரோட்டை வழித்தடமாக கொண்டு அரசு மற்றும் தனியார் பேருந்து இயங்கி வருகிறது. நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு ரூ.35 முதல் 38 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று திடீரென தனியார் பேருந்து ஒன்றில் ரூ.45 கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT

பேருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த வேளையில், நடத்துநர் போட்ட அடுத்த குண்டு பயணிகளை மேலும் ஆத்திரமடையச் செய்தது. “பள்ளிபாளையம் பஸ் ஸ்டாப்பில் வண்டி நிற்காது.. மேம்பாலம் வழியாக நேராக ஈரோடுதான் செல்லும்!” என்று நடத்துநர் தெரிவித்துள்ளார்

இதனால் பள்ளிபாளையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் கொதித்தெழுந்தனர். ” கூடுதலாக காசு கொடுத்த நிலையில், ஸ்டாப்பில் வண்டியை நிறுத்தா விட்டால் என்ன அர்த்தம்?” என்று பயணிகள் நடத்துநரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

பயணிகள் இடையே மோதல் – கூச்சல் குழப்பம்!

ஒருபுறம் பள்ளிபாளையம் பயணிகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் ஈரோடு செல்ல வேண்டிய பயணிகள், “எங்களுக்கு டைம் ஆகுது.. சீக்கிரம் வண்டிய விடுங்க” என்று வாக்குவாதம் செய்ய தொடங்கினர். இதனால் பேருந்துக்குள்ளேயே பயணிகளுக்குள் மோதல் வெடித்து, பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியது. நடத்துநரும், ஓட்டுநரும் பயணிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

இதனால் பேருந்து பள்ளிபாளையத்தை நெருங்கியது. பயணிகளின் வாக்குவாதம் முற்றிய நிலையில் செய்வதறியாது திகைத்த ஓட்டுநர், பேருந்தை நேராக பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.

ADVERTISEMENT

இருதரப்பு புகார்களையும் கேட்ட பள்ளிபாளையம் போலீசார், நடத்துநரைக் கண்டித்ததோடு, பயணிகளைச் சமரசம் செய்து பேருந்தை அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், “நாமக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு வழக்கமாக 35 ரூபாய் தான் டிக்கெட். அரசுப் பேருந்துகளில் இப்பொழுதும் அதே 35 ரூபாய் தான் வாங்குகிறார்கள். ஆனால், இந்தத் தனியார் பேருந்தில் மட்டும் ‘பஸ் அசோசியேஷன்ல நாங்களாகவே விலையை ஏத்திட்டோம்’ என்று சொல்லி 45 ரூபாய் வாங்குகிறார்கள்.

வழியில் ஒரு வயதான பெண்மணி தன்னிடம் காசு இல்லை என்று கூறியும், அவரை நடுவழியிலேயே நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார். இதைப் பற்றி தட்டிக்கேட்டதற்கு, ‘நீ எங்க வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணிக்கோ’ என்று அலட்சியமாகப் பேசுகிறார்.”என்றார்

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share