கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவைக் காண வந்த பெற்றோர், அரங்கிற்கு வெளியே மண் தரையில் அமரும் அவல நிலை ஏற்பட்டது.
கோவை மருதமலை பகுதியில் அரசு சட்டக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் இன்று (ஜூலை 8) 3-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மாவட்ட நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சுமார் 650 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இந்நிலையில், பட்டமளிப்பு விழா நடைபெற்ற அரங்கில் போதுமான இடவசதி இல்லை என்று கூறி மாணவர்களின் பெற்றோர் பட்டமளிப்பு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பட்டம் பெறுவதை நேரடியாகப் பார்க்க இயலாத நிலை உருவானது.
அதே சமயம், பெற்றோர்கள் வெளியில் அமர்வதற்கான போதிய இருக்கை வசதியோ, குடிநீர் வசதியோ கூட கல்லூரி நிர்வாகம் சார்பில் செய்து தரப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், தங்களது பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவைக் காண ஆர்வமுடன் வந்த பெற்றோர் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “சுமார் 650 மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து 2,000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அனைவருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கல்லூரியின் கொள்ளளவிற்கு ஏற்பச் செய்யப்பட்டிருந்தன. மதியம் 2 மணிக்கு முடிய வேண்டிய விழா, அரை மணி நேரத்திற்கு முன்பாகவே துரிதமாக நடத்தி முடிக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.
