வளர்ப்பு மகனுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியில்லை : ரயில்வே வழக்கில் உத்தரவு!

Published On:

| By Kavi

ரயில்வே சேவை விதி 1993ன் படி, வளர்ப்பு மகன் (stepson) குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியற்றவர் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் பாயிண்ட்ஸ்மேனாகப் பணியாற்றி 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-அன்று  உயிரிழந்த கலைச்செல்வியின் வளர்ப்பு மகன் ஜி. செங்கலன், ரயில்வே சேவைகள் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் குடும்ப ஓய்வூதியம் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தை அணுகினார்.  அவரது கோரிக்கையை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தெற்கு ரயில்வே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

ADVERTISEMENT

மறைந்த ஊழியருக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை (Gratuity) ஏற்கனவே ‘ரயில்வே பணிகள் (ஓய்வூதியம்) விதிகள்’-பிரிவு 70-ன் படி செங்கலனுக்கு வழங்கப்பட்டது. அதற்காக வளர்ப்பு மகனான செங்கலன் குடும்ப ஓய்வூதியத்தைப் பெறவும் உரிமை உடையவர்  அல்ல என ரயில்வே தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

ஏனெனில், குடும்ப ஓய்வூதியம் என்பது ரயில்வே விதி 75-ன் படி வழங்கப்படுகிறது. இந்த விதியின் கீழ் வளர்ப்பு பிள்ளைகள் குடும்ப ஓய்வூதியம்  பெற முடியாது என்றும் தெற்கு ரயில்வே கூறியது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு கடந்த ஜூலை 3ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது ரயில்வேயின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் செந்தில் குமார் அமர்வு,  மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் செங்கலனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது 

மேலும், ரயில்வே  விதி 70ன்படி, ஒரு அரசு ஊழியர் தனது பணிக்கொடைத் தொகையைப் பெறுவதற்கு யாரை வேண்டுமானாலும் வாரிசாக நியமிக்கலாம். அதனால்தான் செங்கலனுக்கு அந்தப் பணம் கிடைத்தது. 

ADVERTISEMENT

ஆனால்,  குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை, ஓய்வூதிய விதிகளில் ‘குடும்பம்’ என்று யார் யாரெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் அதை வழங்க வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது” என்று உத்தரவு பிறப்பித்தனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share