கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராகத் தவறினர். இதையடுத்து ஒரு கொலை வழக்கு உட்பட, எட்டு வழக்குகளில் சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகி இருந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இல்லாததால் விசாரணை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு செலவு தொகையாக, சுமார் 62,000 ரூபாய்க்கும் மேல் விதித்து அதை செலுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார் கோவை 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பி.கே.சிவகுமார். ஒரே நாளில் அடுத்தடுத்த வழக்கு விசாரணைகளின் போது இப்படி அதிரடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு செலவு தொகையினை வழங்க உத்தரவிட்ட நீதிபதி யார் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
யார் இந்த நீதிபதி பி.கே. சிவகுமார்?
கோவை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த பி.கே.சிவக்குமார் மாஜிஸ்திரேட் தேர்வு எழுதி மாஜிஸ்திரேட்டாக தேர்வாகி பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்தார். இதனையடுத்து தற்போது கோவை 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். மாஜிஸ்திரேட்டாக பணி புரிந்த காலம் முதலே மிக எளிமையானவராக,நேர்மையானவராக அறியப்பட்டவர் நீதிபதி பி.கே.சிவக்குமார்.
நாமக்கல் மாவட்டதைச் சேர்ந்த 53 வயதான நீதிபதி பி.கே.சிவகுமார், சட்டத் துறையில் தனது நேர்மையான பயணத்தை தொடங்கி சேலம், கோவை, மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை எனப் பல ஊர்களில் மாஜிஸ்திரேட் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு கோவை கூடுதல் மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு கிடைத்தது.
பதவி உயர்வு என்பது பலருக்கு அதிகாரத்தையும், சொகுசையும் கொண்டு வரும். ஆனால், சிவகுமார் அவர்களுக்கு அது இன்னும் கூடுதல் பொறுப்பையும், எளிமையையுமே தந்துள்ளது. “பதவி என்பது மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பே தவிர, நம்மை உயர்த்திக் காட்டிக் கொள்வதற்கான தகுதி அல்ல” என்பதைத் தனது ஒவ்வொரு செயலிலும் மௌனமாக நிரூபித்து வருகிறார் இந்த மனிதர்.
மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்த போது அரசு வாகனங்கள் ஒதுக்கப்படாத நிலையில் தினமும் நீதிமன்றங்களுக்கு சர்வசாதாரணமாக சைக்கிளில் வந்து சென்றவர். அப்போதெல்லாம் மிதிவண்டியை மிதித்தபடி அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்து செல்வது பார்ப்பவர்கள் கண்களில் பிரமிப்பை ஏற்படுத்தியது. சாதாரணமாக சைக்கிளில் வந்து சென்ற அவர் , மிக எளிமையாக வழக்கறிஞர்களுடனும், சட்ட மாணவர்களுடனும் கலந்துரையாடுபவராக இருந்துள்ளார். மாஜிஸ்திரேட்டாக இருந்த போது சாதாரணமாக நீதிமன்ற ஊழியர்களுடன் தேனீர் கடைகளுக்கு சென்று தேனீர் அருந்துவார். நீதிமன்றத்தில் தனி அறை இருந்தாலும் நீதிமன்ற ஊழியர்கள் உணவு சாப்பிடும் பொதுவான அறையில் ஊழியர்களுடன் அமர்ந்து உணவை பகிர்ந்து கொள்வார்.
அதேபோல் தன் அறையில் இருக்கும் போது , அறை வாசலில் செருப்பை கழற்றி விட்டு வருவதை அனுமதிக்கமாட்டார். அனைவரும் செருப்பு அணிந்து கொண்டுதான் அறைக்குள் இருக்க வேண்டும் என்று கூறுவாராம். அனைவருக்கும் கொடுக்கும் அதே மரியாதையை இவர் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற வாயிலில் நிற்பவர்களுக்கும் கொடுப்பது வழக்கம். அவர் அறைக்கு வருபவர்களை நாற்காலியில் அமர வைத்துதான் பேசுவார் என்று அவருடன் பணிபுரிபவர்கள் நெகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.
தற்போது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் அதே எளிமையை கடைபிடிக்கின்றார். நீதிமன்ற வளாகத்திற்குள் எப்போதும் தனியாக நடந்து செல்லும் பழக்கம் கொண்டவரான இவர், தன் பின்னால் ‘டவாலி’ அங்கி அணிந்த சேவகர்கள் யாரும் வருவதை விரும்புவதில்லை. கூடுதல் மாவட்ட நீதிபதியாக தற்போது இருக்கும் நிலையில் அரசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அலுவலக பணிகளுக்கு மட்டும் அரசு வாகனத்தை பயன்படுத்தும் இவர், மற்ற நேரங்களில் எளிமையாக சைக்கிளிலும், நடந்தும் சாதாரண மக்களுடன் கலந்தே நிற்கின்றார்.
மொத்தத்தில், இன்றைய நுகர்வு கலாச்சார உலகிலும், ஆடம்பர மோகத்திற்கு மத்தியிலும் நேர்மை மற்றும் எளிமையின் மீது தீவிர பற்றுதலோடு இருந்து வருகிறார். நீதிபதி பி.கே.சிவகுமாரின் நடவடிக்கைகள், சட்டத்தின் மீதும், மனிதநேயத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை மேலும் பன்மடங்கு அதிகமாக்கும் வகையில் உள்ளது.
