பள்ளிகளில் தேவையின்றி வேறு யாரும் நுழைய கூடாது : அமைச்சர் ராஜ்மோகன்

Published On:

| By Kavi

பள்ளிகளில் தேவையின்றி வேறு யாரும் நுழைய கூடாது என்று அமைச்சர் ராஜ்மோகன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தவெகவினர் ஆய்வு மேற்கொள்வது, முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடியது, அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியது என தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்தது.

பள்ளிகளில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான வழக்கில் அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 9) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

”கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல…
அரசியலின் மேடை அல்ல…
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !

ADVERTISEMENT

​இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.

அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.

ADVERTISEMENT

எந்த அரசியல் கட்சியினரும்,

எந்தத் தனியார் அமைப்பினரும்

ADVERTISEMENT

நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.

​மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.

அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;

கனவுகள் விதைக்கப்படும் நேரம்,

சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,

அறிவு பெருகும் நேரம்,

வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.

​எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.

​பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.

புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.

​எண்ணங்களைத் துளிர்விட்டு,

கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!

அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!

​அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share