கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த கார் விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், இவரது எட்டு மாத கர்ப்பிணி மனைவியான ஜனனி மற்றும் இவர்களது 3 வயது பெண் குழந்தை ஆகியோர் பெங்களூரிலிருந்து காரில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் கார், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈசநத்தம் பிரிவு சாலைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடக்க முயன்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக, ஓட்டுநர் காரை இடதுபுறமாகத் திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் லாரியின் அடியில் சிக்கி நசுங்கியது.
இக்கோர விபத்தில் காரில் பயணித்த அரவிந்த், ஜனனி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வயது குழந்தை துவிதா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
