லக்னோவில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் 14 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உஷா மேத்தா மார்க் சாலையில் உள்ள மூன்று மாடி வணிகக் கட்டிடத்தில் திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தில் கோச்சிங் சென்டர், லைப்ரரி மற்றும் கேமிங் ஜோன் இயங்கி வந்ததால், அங்கு இருந்த மாணவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். சில மாணவர்கள் உயிருக்கு பயந்து முதல் தளத்திலிருந்து கீழே குதித்துத் தப்பினர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் 14 வாகனங்கள் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனாலும் தீ வேகமாக பரவியதால் பலர் சிக்கினர். இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. பலர் காயமடைந்து KGMC மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இருந்தனவா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் பிரஜேஷ் பாடக் நேரில் ஆய்வு
உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாடக் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். “இது மிகவும் வருத்தமான சம்பவம். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
