திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் பகுதியில், தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:”திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவு காரணமாக 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துரதிஷ்டவசமான விபத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 18 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர். மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மற்றும் சிகிச்சை நிலவரங்கள் குறித்து முதலமைச்சருக்கு உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகிறதே?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “நானும் ஊடகங்களில் அந்தச் செய்திகளைப் பார்த்தேன். பெரும்பாலான ஊடகங்கள் 7 பேர் உயிரிழந்ததாகச் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அது உண்மை கிடையாது. இதுவரை இரண்டு பேர் மட்டும்தான் உயிரிழந்துள்ளனர். எனினும், சிகிச்சையில் உள்ளவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
