அமித்ஷா, ப.சிதம்பரம், விஜய் ‘ஜனநாயகன்’.. 3-வது முறையாக சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தாவுக்கு பதவி நீட்டிப்பு- பின்னணி என்ன?

Published On:

| By Mathi

Tushar Mehta gets 3rd extension as Solicitor General

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் (Solicitor General) துஷார் மேத்தாவின் (Tushar Mehta) பதவிக் காலம் 3-வது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான

ADVERTISEMENT

1) விக்ரம்ஜித் பானர்ஜி
2) கே.எம். நடராஜ்
3) சூர்யபிரகாஷ்
4) என். வெங்கடராமன்
5) ஐஸ்வர்யா பதி

ஆகியோரது பதவிக் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

3-வது முறையாக துஷார் மேத்தாவுக்கு பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலாக 2022-ம் ஆண்டு முதல் வெங்கடரமணி பதவி வகித்து வருகிறார்.

அட்டர்னி ஜெனரலுக்கு அடுத்த, சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018-ம் ஆண்டு முதல் துஷார் மேத்தா இருந்து வருகிறார். 2020, 2023-ம் ஆண்டுகளில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 3-வது முறையாக சொலிசிட்டர் ஜெனரலாக, துஷார் மேத்தாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

யார் இந்த துஷார் மேத்தா? (Tushar Mehta)

குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துஷார் மேத்தா. 1987-ம் ஆண்டு முதல் சட்டத் துறையில் பணியாற்றி வருகிறார்.

2008-ம் ஆண்டு தமது 42 வயதில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் “மூத்த வழக்கறிஞர்” என அங்கீகாரம் பெற்றவர்

2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது, மாநில அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார்.

2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் துஷார் மேத்தா.

2018-ம் ஆண்டு சொலிசிட்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். 2020-ம் ஆண்டு துஷார் மேத்தாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது; இதன் பின்னர் 2023-ம் ஆண்டு 2-வது முறையாகவும் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. தற்போது 3-வது முறையாக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

துஷார் மேத்தா ஆஜரான மிக முக்கிய வழக்குகள்


சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் அமைச்சராக இருந்த போது நடந்த சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் அரசின் தலைமை வழக்கறிஞராக வாதாடியவர். இவ்வழக்கில் அமித்ஷா விடுதலையானார்.

ஜம்மு காஷ்மீர் வழக்கு

ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனம் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இதனை மத்திய அரசு 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு சார்பாக ஆஜரானார் துஷார் மேத்தா.

மதமாற்ற தடை சட்டம்

பல்வேறு மாநிலங்கள் இயற்றிய மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களில் மத்திய அரசின் நிலைப்பாட்டை முன்வைத்தார்.

ப.சிதம்பரம் வழக்கு

முன்னாள் மத்திய அமைச்சரான மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறையால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதாடியவர்.

ரஃபேல் போர் விமான வழக்கு

2018-19-ல் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்ட பரபரப்பை கிளப்பிய வழக்குகளில் மத்திய அரசுக்கான வாதாடினார்.

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஊடுருவல் தொடர்பான விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டை முன்வைத்தவர்

ஜனநாயகன் வழக்கு

தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தணிக்கை வாரியம் மறுதணிக்கை குழுவுக்கு அனுப்பியது. இது தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தர் துஷார் மேத்தா.

நீட் (NEET) தேர்வு- டெலிகிராம் தடை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை கோரும் வழக்குகளில் மத்திய அரசு சார்பாக ஆஜரானவர் துஷார் மேத்தா.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share