அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு முறை முதல்வருக்கு தகவல் தெரிவித்து வருகிறோம் என அமைச்சர் குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘St. Peter’s Paul Seafoods Exports’ என்ற தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று காலை அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை என 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் குமார் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் பேசி, தேவையான உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறுதியளித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் குமார் கூறியதாவது: “இந்த அமோனியா வாயு கசிவு விபத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் தற்போது 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக தொழிலாளர்கள் பலியான செய்தி அறிந்து தமிழக முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு முறை முதல்வருக்கு தகவல் தெரிவித்து வருகிறோம்,” என்றார்.
