திருவள்ளூர் அம்மோனியா கசிவு.. 7 பேர் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் உணவு பதப்படுத்தும் ஆலையில் நடந்த அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் ‘St. Peter’s Paul Seafoods Exports’ என்ற தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

ADVERTISEMENT

காற்றில் பரவிய நச்சு வாயுவால் ஆலைக்குள் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு திடீரென மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மருத்துவமனைகளில் அனுமதி – 7 பேர் மரணம்:

பாதிப்புக்குள்ளானவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காகப் பலர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலை நிர்வாகி டேனியல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஆளுநர் அர்லேகர் இரங்கல்:

இந்த விபத்து குறித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான அமோனியா வாயு கசிவு சம்பவத்தில், விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பதுடன், பல தொழிலாளர்கள் காயமடைந்திருப்பது குறித்தும் நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்த எதிர்பாராத துயரச் சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான வலிமையையும் தைரியத்தையும் வழங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ADVERTISEMENT

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைந்து, முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share