திருவள்ளூர்: அம்மோனியா வாயு கசிவு: 70 பேருக்கு என்னாச்சு?

Published On:

| By Pandeeswari Gurusamy

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் இயங்கி வரும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக, 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் கடல் உணவுகளைப் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உணவு பதப்படுத்தும் பிரிவில் திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நச்சு வாயுவை சுவாசித்த அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

ADVERTISEMENT

மீட்புப் பணிகள் தீவிரம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், ஆலைக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட 10 பேர், வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் கருவி) வசதி கொண்ட அவசரக்கால ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற தொழிலாளர்களுக்கும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலருக்கு வாய் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

அதிகாரிகள் நேரில் ஆய்வு:

சம்பவ இடத்திற்குத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா மற்றும் மாவட்ட எஸ்பி சாய் பிரணீத் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தடையின்றி சிகிச்சை அளிப்பதற்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் மட்டுமின்றி, தொழிற்சாலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கும் ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை மருத்துவச் சிகிச்சைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share