திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை உடனடியாக செயல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று தமிழக அரசு தெரிவித்தது.
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், கோயில் செயல் அதிகாரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர்.
கடந்த ஜூன் 4-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராம ரவிக்குமார் சார்பில், ‘புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 22) பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, கோயில் மற்றும் தர்கா தரப்பு, மக்கள் தரப்பு ஆகியோரை இணைத்து ஏன் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
