மதுரையில் LIC அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பெண் ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள கட்டிடத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி.) மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 17) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பின்னர் உள்ளே நடத்தப்பட்ட சோதனையில், 55 வயதான முதுநிலை மேலாளர் ஏ. கல்யாணி நம்பி என்பவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், டி. ராம் (44) என்ற மற்றொரு அதிகாரி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், தீ விபத்துக்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த விபத்துக்கான சரியான காரணம், சேதங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்து காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், LIC அலுவலகத்தில் புதிய திட்டம் ஒன்றின் அறிமுக விழா, வியாழக்கிழமை நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் தீ விபத்து ஏற்பட்டது. நெல்லையைச் சேர்ந்த கல்யாணி, தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்றனர்.
