கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்திருந்த ‘இட்லி பாட்டி’ கமலாத்தாளுக்கு, தற்போது மீண்டும் இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, கடந்த பல ஆண்டுகளாகத் தான் வசிக்கும் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்கள் பயனடையும் வகையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வந்தார். அவரது இந்தச் சேவை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது சேவையைப் பாராட்டி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அவருக்கு உதவிகளை செய்து வந்தன. அவர் இட்லி சமைப்பதை சுலபமாக்கும் வகையில் அவருக்கு மாதம்தோறும் இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், அவருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறி, அவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். மத்திய அரசு, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் எரிவாயு முகவர்கள் இணைந்து, கமலாத்தாள் பாட்டிக்கு மாதம்தோறும் 3 சிலிண்டர்களை நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று அவருக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சியடைந்த ‘இட்லி பாட்டி’ கமலாத்தாள், தனக்கு மீண்டும் சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர், BPCL நிறுவனம், எரிவாயு முகவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
