கோவை மாவட்டம் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, கடந்த பல ஆண்டுகளாகத் தான் வசிக்கும் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்கள் பயனடையும் வகையில் ஒரு ரூபாய்க்கு இட்லி செய்து விற்பனை செய்து வந்தார். அவரது இந்தச் சேவை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது சேவையைப்பாராட்டி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அவருக்கு உதவிகளைச் செய்து வந்தன.
இந்நிலையில் அவருக்கு மாதத்திற்கு இரண்டு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென அவை நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த கமலாத்தாள் பாட்டி, ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், “எனக்கு மாதத்திற்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு, ஆரம்பத்தில் சில மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், தற்போது இலவச சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. ஏழை மக்களுக்குத் தொடர்ந்து ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் செலவைச் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். எனவே, எனக்கு இலவச கேஸ் சிலிண்டர்களை மீண்டும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
