ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி சென்னை மத்திய குற்றவியல் பிரிவில் பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு வீடியோ ஆதாரங்களுடன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த நபர் 84 வயதான ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி என்பது தெரிய வந்தது.
தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதன் நிர்வாக பொறுப்புகளை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் ஒப்படைத்த ஜெம் வீரமணி, அந்த வீட்டில் வைத்து பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோக்கள் தான் போலீசாரிடம் பென்டிரைவ் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜெம் வீரமணி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகளான சாந்தி மற்றும் மகேந்திரன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் சிக்கியது எப்படி? என்று நமது மின்னம்பலத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வெளியான டிஜிட்டல் திண்ணையில் விரிவாக கூறியிருந்தோம்.
தற்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
போக்சோ நீதிமன்றத்தின் அனுமதியோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீரமணி வழக்கில் எந்த குற்றவாளியையும் தப்பிக்க விட்டு விடக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அமல் ராஜுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தவும், அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கவும் காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வருகின்றன.
