கோவிலில் உள்ள ஸ்ரீவேதாந்த தேசிகர் மற்றும் தாத தேசிகர் சன்னதிகளில் திவ்யப் பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை எதிர்தரப்பு பின்பற்றவில்லை என்று இரு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வடகலை – தென்கலை பிரச்சினை என்றாலே நம்மில் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நெற்றியில் போடும் ‘நாமம்’தான். வடகலை நாமம் ஒரு வடிவம்; தென்கலை நாமம் மற்றொரு வடிவம்.
அப்படியானால் நாமம் போடுவதில்தான் இத்தனை பஞ்சாயத்தா? நிச்சயமாக ‘நாமம்’ மட்டுமே பிரச்சனை இல்லை. நாமத்தின் வடிவம் இரு மரபுகளையும் வெளிப்படையாக அடையாளப்படுத்தும் ஒரு வேறுபாடு மட்டுமே. காஞ்சிபுரத்தில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றம் வரை சென்று கொண்டிருக்கும் இந்த பிரச்சினையின் மையமே வேறு.
வடகலை – தென்கலை என சொல்லப்படும் இரண்டுமே ஸ்ரீவைணவத்தின் இரு மரபுகள். இரு தரப்பினரும் திருமாலை வழிபடுகிறார்கள். இரு தரப்பினரும் ராமானுஜரை முக்கிய ஆசாரியராக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் ஆசாரிய மரபு மற்றும் சில தத்துவ விளக்கங்கள், வழிபாட்டு நடைமுறைகளில் வேறுபாடுகள் ஏற்பட்டன.
வடகலை மரபில் வேதாந்த தேசிகருக்கும், தென்கலை மரபில் மணவாள மாமுனிகளுக்கும் முக்கிய இடம் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கோவில் வழிபாட்டில் எந்த மந்திரத்தைச் சொல்வது, பிரபந்த பாராயணத்தை எப்படித் தொடங்குவது, எப்படி முடிப்பது என்பதிலும் வேறுபாடுகள் ஏற்பட்டன.
காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரையில் பெருமாளுக்கு நடைபெறும் அதிகாரப்பூர்வ வழிபாடு மற்றும் ஊர்வலங்களின்போது திவ்யப் பிரபந்த பாராயணத்தை யார் முன்னின்று நடத்துவது என்பதுதான் பிரச்சினை. இதற்கு ‘அத்யாபக மிராசி’ என்று பெயர். அதாவது கோவிலின் அதிகாரப்பூர்வ சடங்கின்போது நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை முன்னின்று பாடுவது, அதற்கு முன் தொடக்க மந்திரத்தைப் பாடுவது, இறுதியில் வாழித் திருநாமம் பாடுவது உள்ளிட்ட பாரம்பரிய சேவை உரிமை குறித்த பிரச்சனை. இந்த உரிமை யாருக்கானது? என்பதுதான் 200 ஆண்டுகளாக நீடிக்கும் மோதல்.
தென்கலை தரப்பு சொல்வது என்ன?
காஞ்சிபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவினருக்கே அத்யாபக மிராசி உரிமை இருப்பதாக அந்தத் தரப்பு கூறுகிறது. பிரபந்த பாராயணத்தைத் தொடங்கும்போது மணவாள மாமுனிகளைப் போற்றும் ‘ஸ்ரீசைலேச தயாபாத்திரம்’ என்ற தனியனைப் பாடுவது தென்கலை மரபு.
அதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் பொதுவான நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடப்படும். இறுதியில் மணவாள மாமுனிகளுக்கான வாழித் திருநாமம் பாடப்படும்.
இதுவே வரதராஜ பெருமாள் கோவிலின் பாரம்பரிய நடைமுறை என்றும், அதை முன்னின்று நடத்தும் மிராசி உரிமை தங்களுக்கே இருப்பதாகவும் தென்கலை தரப்பு வாதிடுகிறது.
வடகலை தரப்பு என்ன சொல்கிறது?
ஆனால் வடகலை மரபில் வேதாந்த தேசிகருக்கு முக்கிய இடம் வழங்கப்படுகிறது. எனவே தங்களுடைய மரபுக்குரிய ‘ராமானுஜ தயாபாத்திரம்’ உள்ளிட்ட தனியன்கள் மற்றும் வேதாந்த தேசிகர் தொடர்பான பாடல்களைப் பாடுவதற்கும் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பது வடகலை தரப்பின் வாதம். தாங்களும் ஸ்ரீவைணவர்களாக இருக்கும்போது தங்களது மரபின்படி வழிபடுவதற்கும் பாடுவதற்கும் தடை விதிக்கக் கூடாது என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
200 ஆண்டுகளாக நடக்கும் பஞ்சாயத்து
இந்தப் பிரச்சினை சமீபத்தில் உருவானது அல்ல. 1828-ஆம் ஆண்டிலேயே இரு தரப்பினருக்கும் இடையேயான அத்யாபக மிராசி உரிமைப் பிரச்சினை நீதிமன்றத்துக்கே வழக்காகச் சென்றுள்ளது. 1882-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், அத்யாபக மிராசி உரிமை என்பது ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கைத் தவிர காஞ்சிபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவினருக்குரியது என்று தீர்ப்பளித்தது.
வடகலைப் பிரிவினர் சாதாரண பக்தர்களாக பாராயணத்தில் பங்கேற்கலாம். ஆனால் தென்கலை அத்யாபக மிராசிதாரர்களின் அதிகாரப்பூர்வ சேவையில் தங்களுக்கான தனி மந்திரத்தைப் புகுத்த முடியாது என்பதே அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம்.
1915-ல் மீண்டும் தீர்ப்பு
ஆனாலும் பிரச்சினை முடியவில்லை. 1906-ல் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதன் மேல்முறையீட்டில் 1915-ல் முக்கியமான தீர்ப்பு வந்தது. கோவில் பூஜை மற்றும் பெருமாள் ஊர்வலத்தின்போது தென்கலை மிராசிதாரர்களின் மந்திரம் மற்றும் பிரபந்த பாராயண உரிமையை நீதிமன்றம் உறுதி செய்தது. வடகலைப் பிரிவினர் பக்தர்களாக அதில் பங்கேற்கலாம்; ஆனால் அதிகாரப்பூர்வ வழிபாட்டு நேரத்தில் தனியாக ஒரு கோஷ்டியாக நின்று தங்களுடைய மந்திரம் மற்றும் பிரபந்தத்தைப் பாடுவதற்கான உரிமை இல்லை என்ற நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் 1939, 1969 உள்ளிட்ட ஆண்டுகளிலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியது. அதன்பிறகும் பல்வேறு காலகட்டங்களில் இந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியது. பல ஆண்டுகளாக நீடித்த இந்தப் பிரச்சினையில் 2022-ல் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த உத்தரவு மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
வடகலைப் பிரிவினரும் சில நிபந்தனைகளுடன் தங்களுக்குரிய பாடல்களைப் பாடுவதற்கு வழிவகுக்கும் வகையில் அந்த உத்தரவு இருந்தது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
2025-ல் சென்னை உயர் நீதிமன்றம் என்ன சொன்னது?
இந்த மேல்முறையீடுகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, 2025 நவம்பர் 28-ஆம் தேதி முக்கியமான தீர்ப்பை வழங்கியது. 2022-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்ட தென்கலைப் பிரிவினரின் அத்யாபக மிராசி உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. தேவைப்பட்டால் நீதிமன்றத் தீர்ப்புகளை அமல்படுத்த காவல்துறை உதவியையும் கோவில் நிர்வாகம் பெறலாம் என்று தெரிவித்தது.
அதேநேரத்தில் வடகலைப் பிரிவினர் பெருமாளை வழிபடுவதற்கோ, பக்தர்களாக வழிபாட்டில் பங்கேற்பதற்கோ தடை இல்லை என்பதையும் தீர்ப்பு வேறுபடுத்திக் காட்டியது.
உச்ச நீதிமன்றத்துக்கும் போன பிரச்சினை!
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியது. இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்த முடியுமா என்பதற்காக, 2026 ஜனவரி 28-ஆம் தேதி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை பிரதான மத்தியஸ்தராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதாவது 1800-களில் நீதிமன்றம் சென்ற பிரச்சினைக்கு 2026-லும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி நடைபெறும் நிலை ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரத்தில் வடகலை, தென்கலை பிரிவினரிடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காஞ்சியில் வடகலை – தென்கலை பிரிவினருக்கு இடையேயான பிரச்சினை, நெற்றியில் எந்த வடிவத்தில் நாமம் போடுவது என்பதில் மட்டும் இல்லை. கோவில் வழிபாட்டில் பல தலைமுறைகளாகத் தொடரும் பாரம்பரிய சேவை மற்றும் திவ்யப் பிரபந்த பாராயண உரிமையை மையமாகக் கொண்டதுதான் இந்த 200 ஆண்டு காலப் பிரச்சினை.
