நா.மணி
தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது சுதந்திர இந்தியாவில் மிகுந்த வலி நிறைந்த ஒரு காலகட்டம். சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, அவசரநிலைக் காலகட்டத்தைவிடவும் நெருக்கடியான காலகட்டம். இந்த நாட்டின் இளைஞர்களைக் கொதித்தெழச் செய்த நிகழ்வு. இந்தத் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் தேவையா என்ற அடிப்படையான கேள்வியை எழுப்பினால், நிச்சயமாக இது தேவையே இல்லை என்ற பதிலே கிடைக்கும்.
ஏன் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் தேவையில்லை?
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது தொடர்ந்து, ஆண்டு முழுவதும் நடைபெற வேண்டிய பணியாகும். 2021-ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல் ஆணையச் சட்டத் திருத்தத்தின்படி, ஓராண்டில் நான்கு முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற வேண்டும். ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நான்கு தேதிகளில் 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
தற்போது இணையவழியில்கூட அதைச் செய்துகொள்ள முடியும். வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களும் (BLOs) இருக்கிறார்கள். அவர்களும் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளில் ஈடுபடுகிறார்கள். இத்தனை ஏற்பாடுகள் இருந்தும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முறையாக நடைபெறாமல் போனது ஏன் என்ற கேள்விக்கு முதலில் விடையைக் கண்டறிய வேண்டும்.
முறையான, இயல்பான வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் போதுமானது அல்ல என்று தேர்தல் ஆணையம் கருதும்போது, வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்குச் செல்கிறது. பெரிய அளவிலான குடிபெயர்ச்சி, வேகமான நகரமயமாக்கம், ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் நீடிப்பது போன்ற காரணங்களுக்காகத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் கொண்டுவரப்படலாம். அப்படி, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 13 முறை தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றிருக்கிறது. 1952-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் திருத்தப் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. கடைசியாக 2003-இல் நடைபெற்ற தீவிரத் திருத்தப் பணிகள் ஆறு மாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. சமீபத்திய சிறப்பு தீவிரத் திருத்தப் பட்டியல் பணி மூன்று மாதங்களில் முடிந்திருக்கிறது. ஏன் இந்த அவசரம்?

ஒரு மாநிலத்தில், குறுகிய காலத்திற்குள் தேர்தலை வைத்துக்கொண்டு, அந்த மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியை நடத்த வேண்டிய அவசியம் என்ன? பழைய வாக்காளர் பட்டியலே போதுமானது. தகுதியான வாக்காளர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெற்றால், அதுவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதே. தேர்தலுக்கு முன்பு, வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.
இறந்தவர்களின் பெயர்கள் பல நீக்கப்படவில்லை. அதேபோல், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை. ஆனால், தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், அவர்களுக்குப் பதிலாக வேறு யாரேனும் சென்று வாக்களிப்பது கடினம். காரணம், வாக்காளர் அடையாள அட்டை வந்த பிறகு, வாக்களிப்பதற்கு ஏதேனும் ஓர் அடையாள அட்டை தேவை என்ற நிலை வந்துவிட்டது. இதனைத் தாண்டி, BLO என்ற ஓர் அதிகாரி வந்த பிறகு, பெருமளவு கள்ள வாக்குகள் தவிர்க்கப்பட்டுவிட்டன. இதையும் தாண்டி, தவறுகள் விதிவிலக்காக நடைபெறலாம். அது எப்போதும் இருக்கும்.
தேர்தல் ஆணையத்தில் அவசரம்
இந்தச் சூழ்நிலையில், தேர்தலுக்கு முன்பு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தியே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களைப் பித்துப் பிடித்துப் போகும் அளவுக்குத் திணித்து வேலை வாங்கினார்கள். பல நாள்கள் தூக்கத்தைத் தொலைத்து அவர்கள் வேலை செய்தார்கள். குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் மிகவும் மனம் நொந்து வேலை செய்தார்கள். அவர்களுடைய கணவர்கள் பேராசிரியர்களாக இருக்கலாம், பொறியாளர்களாக இருக்கலாம். அவர்களையும் சேர்த்து இழுத்துக்கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. பல நாள்கள் பலர் கதறிக் கதறி அழுதார்கள். அதன் உச்சமாக, சில தற்கொலைகள் நடந்ததையும் நாம் கண்டோம். வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் தேவை என்றாலும், அதை நிதானமாக, அவசரமின்றி, அழகாக, நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கலாம். மாறாக, தேர்தல் ஆணையம் ராணுவ மனோபாவத்தோடு நடந்துகொண்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது.
சீர்திருத்தமா? தகுதி நீக்கமா?

அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியும், 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 21(3)-ன்படியும் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணியை மேற்கொண்டிருக்கிறது. இதனைச் செய்வதற்கான பரந்த நோக்கமாக, தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் நோக்கங்களை முன்வைக்கிறது. “தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபட்டுவிடக் கூடாது. தகுதியற்றவர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறக் கூடாது.” உண்மையில், தகுதியானவர்களைச் சேர்ப்பது உண்மையான நோக்கமாகத் தெரியவில்லை. தகுதியானவர்களைத் தகுதி நீக்கம் செய்வதே உண்மையான நோக்கம் என்று தெரிகிறது. அதற்கான நிரூபணங்கள் பொதுவெளியில் நிரம்பியிருக்கின்றன. தகுதியானவர்கள் நீக்கப்பட்டுவிட்டார்கள் என்பதற்கான எதிர்வினையாக, நாடு முழுவதும் இரவு பகலாக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
சாமானிய மக்கள் சந்தித்த சவால்கள்!
எனவே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. இதுவரை நடந்த தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தங்களில், வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொண்டு பணியாளர்கள் களத்திற்குச் சென்றார்கள். நேரடியாக மக்களைச் சந்தித்தார்கள். விசாரித்தார்கள். வாக்காளரின் பெயர் சேர்க்கப்படுவதையோ அல்லது நீக்கப்படுவதையோ உறுதிசெய்துகொண்டார்கள். தற்போதைய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், 2003-ஆம் ஆண்டிற்குச் சென்று வாக்காளர்களின் வேர்களைத் தேடினார்கள். 2003-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லாதவர்களிடம் ஆவணங்கள் வரிசைப்படுத்தப்பட்டுக் கோரப்பட்டன.
இதுவரை நடந்த தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தங்களில், இந்த இடத்தில்தான் வசிக்கிறேன் என்பதை வாக்காளர் உறுதிசெய்தால் போதும்; பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நான் இங்குதான் வாழ்ந்தேன், வாழ்கிறேன் என்பதற்கான அடையாளமாகத் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய நிலை வந்தது. ஆவணங்களைத் தருவதற்காக மக்கள் பட்ட அல்லல் கொஞ்சநஞ்சமல்ல. முதலில், பெரும்பகுதி சாமானிய மக்கள் இந்த ஆவணங்களைப் பற்றியே அறிந்திருக்கவில்லை.
குடிபெயர்ந்து கூலி வேலைக்காக எந்த ஊருக்குச் சென்றாலும், தங்கள் சொந்த ஊரில்தான் வாக்களிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருப்பவர்கள் பலர். அவர்களை எங்கு தேடியும் பிடிக்க முடியவில்லை. அவர்கள் கொடுத்துவிட்டுச் சென்ற அலைபேசி எண் ஒன்றாகவும், இப்போது அவர்கள் பயன்படுத்துவது வேறொன்றாகவும் இருந்தது. குறுஞ்செய்திகளைப் பார்க்கத் தெரியாத மக்கள், புலனக் குழு வசதி இல்லாத மக்கள், என்ன ஆட்சேபனை என்பதையே புரிந்துகொள்ள முடியாத சாமானிய மக்கள் எனப் பலரும் இருந்தனர். எவ்வளவு போராடியும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்த ஆவணங்களின் தேவையைப் பற்றி அவர்களுக்குப் புரியவைக்கவே முடியவில்லை.
இந்த ஆவணங்களைத் தயார் செய்ய ரூ.150 வரை காசு பார்த்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அப்போது ஓட்டுக்குப் பணம் எவ்வளவு கொடுப்பார்கள், என்ன கொடுப்பார்கள் என்று மக்கள் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்றால் ஓட்டுக்குப் பணம் கிடைக்காது என்ற ஒரு காரணத்திற்காகப் பலர் போராடி, ஆவணங்களைத் தேடிக் கொடுத்து, தங்கள் பெயர்களை இணைத்திருக்கிறார்கள் என்பது அவலச்சுவை நிறைந்த செய்தியாகும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், நிலையான முகவரியில் குடியிருப்பவர்கள், பிறப்புச் சான்றிதழோ வேறு ஆவணங்களோ கேட்கும்போது அவற்றைக் கொடுக்கக்கூடிய நிலையில் இருந்த மக்கள், படித்தவர்கள் ஆகியோருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், ஆவணங்கள் இருந்தபோதும், வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அவற்றைத் தராமல் பாடாய்ப்படுத்தியவர்களும் உண்டு. குடிபெயரும் தன்மையுடைய மக்கள், விவசாயக் கூலிகள், மாதக்கணக்கில் குடிபெயர்ந்து செல்பவர்கள், சொத்து இல்லாதவர்கள், நிலையான முகவரி இல்லாதவர்கள், போக்குவரத்து வசதி இல்லாதவர்கள், பெண்கள், உழைப்பாளி மக்கள், முறைசாராத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த ஆவணங்களைத் தயார் செய்து கொடுப்பதில் பெரும்பாடாக இருந்தது.
இப்படி வாக்காளர்களை உறுதிசெய்து, வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கான சரிபார்ப்பு முறையை மாற்றியதன் அடிப்படை நோக்கம், அனைத்து குடிமக்களையும் சந்தேகிப்பதாகவே இருந்தது. இது எந்த நாட்டிலாவது நடைபெற்றிருக்குமா என்பது சந்தேகமே.
சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்கிறோம். ஆனால், எந்த ஆவணத்தைக் கேட்டாலும் உடனடியாக அலைபேசியிலிருந்து எடுத்து அடுக்கி வைக்கும் மக்கள் எங்கே? ஆவணங்களைப் பராமரிக்கத் தெரியாத, பராமரிக்க வேண்டும் என்று நினைக்காத, அதற்கான தேவை இல்லாத, வசதி இல்லாத நிலையில் இருக்கும் மக்கள் எங்கே? இவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய வேறுபாடு எங்கே? சம உரிமை இவர்களுக்கு எங்கே இருக்கிறது? சம உரிமையை நிலைநாட்ட அவர்கள் பட்ட பாடு எத்தகையது? இவர்களை எப்படிச் சம குடிமக்கள் என்று சொல்வது? உயிரோடு வாழ்ந்தும், காலங்காலமாக இந்த நாட்டின் குடிமக்களாக இருந்தும், சட்டரீதியாகத் தங்களை நிரூபிக்க முடியாமல், ஆவணங்களைத் தேடி இந்த நாட்டின் குடிமக்கள் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக அலைந்த அலைச்சல் கொஞ்சநஞ்சமல்ல. அவர்கள் பட்ட பாடுகளும் கொஞ்சநஞ்சமல்ல.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!
தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்களைத் தயார் செய்து கொடுப்பது சாமானிய மக்களைப் பொறுத்தவரை பெரும் சுமை. சுமக்கவே முடியாத சுமை. அப்படிச் சுமக்க முடியாமல், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போனவர்கள்தான் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு வாக்காளருக்கு, குடிமகனுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலில் தன்னை நிரூபிக்க முடியவில்லை என்று வாக்குரிமையை இழப்பது எவ்வளவு பெரிய கொடுமை! ஆவணம் இல்லை என்பதால் தனது ஜனநாயக உரிமையை இழப்பது எவ்வளவு பெரிய அநியாயம்! இந்த வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்த வந்தேன் என்று சொல்லக்கூடிய தேர்தல் ஆணையம், 2003-க்கு முன்பும் 2003-க்குப் பின்பும் உள்ளவர்களை, இருப்பவர்களாக இருந்தும் இல்லாதவர்கள் போல் நடத்துகிறது. இது எந்த அளவுக்குச் சரியானது?
உழைப்பாளி மக்கள், தொடர்ந்து குடிபெயர்ந்து அதன் மூலமாக வாழ்ந்து வரும் மக்கள், சாதிப் படிநிலை அமைப்பில் கீழ்நிலையில் இருப்பவர்கள், பெண்கள், கிராமப்புற மக்கள், முறைசாராத் தொழிலாளர்கள் ஆகியோர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை இழந்து நிற்கிறார்கள்.

இதைத் தாண்டி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், “தகுதியான ஒருவர் கூட வாக்காளர் பட்டியலுக்கு வெளியே இருக்கக் கூடாது. தகுதியற்றவர்கள் வாக்காளர் பட்டியலுக்குள் இருக்கக் கூடாது” என்ற வீரதீர வசனங்களைப் பேசுவதும், கவர்ச்சிகரமான சொற்களைப் பயன்படுத்துவதும் முதலில் கேட்பதற்கு இனிப்பாகத்தான் தோன்றும். இஸ்லாமிய வாக்காளர்களை வடிகட்டிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் இதில் இருக்கின்றன; அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான கூறுகளும் இருக்கின்றன. அவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் நோக்கம், அவர்களைத் தவிக்கவிடும் நோக்கம் இந்தச் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இருக்கிறது என்ற வாதங்கள் எளிதாக எப்படிப் பிறந்தன?
வெறுப்பு அரசியல் உதிர்த்த ஒரு கருவியைச் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற சொற்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பொருள் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
மற்ற வாக்காளர்களைக் காட்டிலும் இஸ்லாமிய வாக்காளர்கள், தங்களைத் திட்டமிட்டு நிராகரிக்கக்கூடும் என்று கருதி, போதுமான ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறிய ஆவணங்களைப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர் வரும்போது மிகுந்த கவனத்தோடு அவற்றைக் கொண்டுவந்து சமர்ப்பித்தார்கள். அதற்கு என்ன பொருள்? இவை எல்லாம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் நெஞ்சை வலிக்கச் செய்யும் விவரங்களாக இருக்கின்றன.
நம் நாடு பொறுப்புள்ள ஜனநாயகக் குடியரசாக இருந்தால், தற்போது நடைமுறையில் இருக்கும் ஆண்டுக்கு நான்கு முறை பெயர் சேர்த்தல், நீக்கல் நடைமுறைகளைச் செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலை எப்போதோ ஒருமுறை அல்லாமல், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை செழுமைப்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல, செறிவான வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்திற்கு (Intensive Revision) தேர்தல் ஆணைய விதிகளில் இடம் இருந்தாலும், அத்தகைய ஒன்றைத் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தலாம். அடுத்து, இப்போது நடைபெறுவது போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) எப்போதும் தேவையில்லை.
கட்டுரையாளர்










