”தீபாவளி கொலைகள் புதிதல்ல”- அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!

By Mathi

|

Published on 10 Nov 2026, 1:29 PM

Kanimozhi-Rajmohan

தீபாவளியன்று நடந்த கொலைகளை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ராஜ்மோகனுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை எடுத்துச் சொல்லும் போதும், பத்திரிகையாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பும் போதும், அரசாங்கத்தில் இருக்கக்கூடிய ஓர் அமைச்சர் ஏதோ வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதுபோல, சென்ற ஆண்டு இப்படி இருந்தது, அதற்கு முந்தைய ஆண்டு இப்படி இருந்தது, இந்த ஆண்டு இப்படி இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பேசுகிறார்.

ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏதோ சாதாரண விஷயத்தைப்போல சகஜமாக்க முயற்சி செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம்கூட அவர்களுக்கு இல்லை. எப்படியாவது ஒரு காரணத்தை, சால்ஜாப்பைச் சொல்லித் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோளாக இருக்கிறதே தவிர, தங்களை சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஆறு மாதம் கொடுங்கள், நாங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வோம் என்கிறார்கள். நீங்கள் கற்றுக்கொண்டிருப்பது தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆபத்தான விஷயங்களைத்தான். ஏனென்றால், பல குற்றங்களில் ஈடுபட்டிருப்பது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி ஆட்சியர், துணை சபாநாயகர் விவகாரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் அவர் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்திருப்பதாகத் தகவல் சொல்லப்படுகிறது. அவர் வெளிப்படையாகப் பேசவில்லை.

தீபாவளியன்று நடந்த ஒரு சம்பவத்தையும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட நபர், துணை சபாநாயகரின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டு, மிரட்டப்பட்டு ஒரு வீடியோ வெளியிட வைக்கப்பட்டதாக இப்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

அதேபோல, இந்த அரசாங்கத்தில் இருக்கக்கூடிய தவெக நிர்வாகிகள் குறித்தோ, எம்.எல்.ஏ.க்கள் குறித்தோ பெண்கள் புகார் அளிக்கும்போது, அவர்கள் மிரட்டப்பட்டு வழக்குகளை வாபஸ் பெற வைக்கப்படும் சூழலைத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்கூட பார்த்திருக்கிறோம்.

பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆளுங்கட்சியினருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்; மிரட்டப்படுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

ஆட்சியருக்குப் பாதுகாப்பு ஏன்?

கள்ளக்குறிச்சி விவகாரம் எப்படி முடியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அங்குள்ள எம்.எல்.ஏ. ஒன்றுமே நடக்கவில்லை என்று பேசுகிறார். அப்படியானால், திடீரென்று மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை நாட்களாக இல்லாமல் புதிதாக ஒரு காவல்துறை அதிகாரியை நியமித்து அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? இதற்கும் ஏதாவது ஒரு திரைக்கதை, வசனம் எழுதி ஒரு காரணத்தைச் சொன்னாலும் சொல்வார்கள்.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை

அரசியலில் எல்லாப் பெண்களும் வர வேண்டும். எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த பெண்களும் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும், பாகுபாடு காட்டப்படுவதையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். இப்போது அரசின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு பெண் அதிகாரிக்கே இதுபோன்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள்; குற்றங்களே நடக்காது; ராணுவக் கட்டுப்பாட்டில் நாட்டை வைத்திருப்பேன் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இன்று என்ன நடக்கிறது?

முன்பெல்லாம் ஓர் எதிரி நாட்டின் மீது ராணுவம் படையெடுத்துச் சென்றால் அங்கு எப்படிப்பட்ட அட்டூழியங்கள் நடைபெறும் என்று சொல்வார்கள். அது போன்ற சூழல்தான் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஏதோ தமிழ்நாட்டுக்கு எதிராகப் படையெடுத்து வந்ததுபோல தவெகவினர் இன்று தமிழ்நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை குழந்தைகளாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும், பெரியவர்களாக இருக்கட்டும், யாருக்குமே பாதுகாப்பு கிடையாது. எத்தனை கொலைகள் நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கிறோம். இந்த ஆட்சியில் யாராக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

6 மாத ஆட்சிக்கு அறிவுரை என்ன?

அப்போது செய்தியாளர்கள், “விஜய் அரசு 6 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது. உங்களுடைய வாழ்த்து அல்லது அறிவுரை என்னவாக இருக்கும்?” என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த கனிமொழி, “இனிமேலாவது கொஞ்சம் பொறுப்போடு செயல்படுங்கள்” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel