செஞ்சி அருகே கடைக்குச் சென்றுவிட்டு தனியாக நடந்து வந்த 7 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது 7 வயது மகள் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தனியாக நடந்து வந்த சிறுமியை ஆட்டோவில் ஏறுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி உடனடியாகக் கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும், அந்த நபர்கள் ஆட்டோவில் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டிற்குச் சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று சிறுமியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது மகளைக் கடத்த முயன்ற அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, செஞ்சி அருகே ஆலம்பூதியைச் சேர்ந்த ஹேமலதா என்ற 7 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி காணாமல் போய் 30 நாட்களான நிலையில், தேடும் பணியில் சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், ஒரு மாதம் ஆகியும் சிறுமி குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகாத சூழலில், இவ்வழக்கை சிபிஐ-க்கு (CBI) மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏற்கெனவே காணாமல் போன சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறுமியைக் கடத்த முயன்றதாக வெளியான தகவல் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.









