“தகவல் சொன்னது தப்பா?” செஞ்சி சிறுமி வழக்கில் சிபிசிஐடி விசாரணை.. கதறும் அங்கன்வாடி ஊழியர்!

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2026, 10:20 AM

செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றுடன் 25 நாட்கள் கடந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை அவமானப்படுத்துவதாக, சிறுமியைப் பார்த்ததாகக் கூறும் அங்கன்வாடி சமையலர் பவானி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலையில் திடீரென காணாமல் போனது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பவானி (வயது 35), கோனானூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT

இவர் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலில் வயதான தம்பதியுடன் சிறுமி ஹேமலதாவைப் பார்த்ததாக, அவசர உதவி எண் 100-க்கு அழைத்து போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாமக்கல் சிபிசிஐடி போலீசார் பவானியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் நேரடியாக நாமக்கல் வந்து அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளனர்.

நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக பவானி குற்றம் சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் குழந்தை குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. என் குழந்தை காணாமல் போனால் மனிதாபிமான அடிப்படையில் யாராவது தகவல் சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கும். அதே எதிர்பார்ப்போடுதான் நான் பார்த்த விஷயத்தைச் சொன்னேன். அந்த உயிரைக் காப்பாற்ற முடிந்தால் சந்தோஷம்; அந்த குழந்தை உயிரோடு இருக்கிறது என்ற தகவலாவது கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில்தான் கூறினேன்.

ஆனால் காவல்துறையினர் என்னை பற்றி இரண்டரை மணி நேரம் எங்கள் பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். எனது குடும்பத்தைப் பற்றியும், எனது ஒழுக்கம் குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர். இது எனது துறை சார்ந்த மேலதிகாரிகளுக்குத் தெரியவந்தால் என்னாவது? எனக்கு பயமாக இருக்கிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான் பார்த்த விஷயத்தைக் கூறினேன். ஆனால் போலீசார் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் எனது குடும்ப பின்னணி, சுய ஒழுக்கம் என விசாரித்து வருவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எதற்காக சிறுமி குறித்த தகவலைக் கூறினோம் என்றே கஷ்டமாக உள்ளது. கண்டிப்பாக சிபிசிஐடி முத்துக்குமார் சார் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel