உ.பி. தேர்தல்: அக்னி வீரர்கள் திட்டத்தில் மத்திய பாஜக அரசு ‘அந்தர் பல்டி’!

By Mathi

|

Published on 5 Nov 2026, 3:06 AM

Agniveer-UP Election-BJP

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அக்னி வீரர்கள் திட்டத்தில் மத்திய பாஜக அரசு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதை தேர்தலுக்காக மத்திய அரசு அடித்திருக்கும் ‘அந்தர் பல்டி’ என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இளைஞர்களைப் பணியில் சேர்ப்பதற்காக 2022 ஜூன் 14-ந் தேதி அக்னிபாத் திட்டத்தை மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்தது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின்படி அக்னி வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். இவர்களில் தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர ராணுவப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பணியிலிருந்து வெளியேற வேண்டும்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவ வேலைக்காகத் தயாராகி வந்த இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின.

ADVERTISEMENT

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தவர்களில் சுமார் 18,300 பேர் வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் தங்களது 4 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

இதற்கு முன்னதாக, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 25 சதவீத அக்னி வீரர்கள் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

மீதமுள்ள 75 சதவீத அக்னி வீரர்களும் விருப்பத்தின் அடிப்படையில் மேலும் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். இந்தக் கூடுதல் பணிக்காலம் முடிந்த பின்னர் தொடர்ந்து பணியாற்ற விரும்புபவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்தால் நிரந்தர ராணுவப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இந்தக் கூடுதல் 2 ஆண்டு பணிக்காலத்தில் ஊதிய உயர்வு, சேவா நிதி தொகை அதிகரிப்பு, பணிமூப்பு சார்ந்த சலுகைகள் ஆகியவையும் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (நவம்பர் 4) அறிவித்துள்ளது.

அக்னி வீரர்களின் உடற்தகுதி, ஒழுக்கம், தொழில்நுட்பத் திறன், பணிச் செயல்பாடு ஆகியவற்றை கடந்த 4 ஆண்டுகளாக மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

உ.பி. தேர்தலும் காங்கிரஸ் விமர்சனமும்

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ”அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்தார். இந்தத் திட்டம் ராணுவத்துக்கும் இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். ஆனால் அப்போது மத்திய அரசு அதைக் கேட்கவில்லை. இப்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நெருங்குவதால் அக்னிபாத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் பாஜகவை பாரதிய ஜனதா பல்டி (Bharatiya Janata Palti) என்றுதான் அழைக்க வேண்டும். 25 சதவீதம் பேருக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேருக்கு மேலும் 2 ஆண்டுகள் பணிக்காலத்தை நீட்டித்துள்ளனர். அந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களின் நிலை என்ன? மீண்டும் அவர்களை வேலையில்லாமல் வீட்டுக்கு அனுப்புவார்களா? அல்லது மத்திய அரசு இன்னொரு அந்தர் பல்டி அடிக்குமா? அக்னிபாத் திட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு” என்றார்.

ஆனால், அக்னி வீரர்களின் செயல்பாடு குறித்து பாதுகாப்புப் படைகள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel