தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களும் வேதனையில் இருக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, ‘பெரியார் அறிவுலகம்’ அமைத்ததற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில் கோவையில் பாராட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ”வந்ததுல இருந்து ஒரு மணி நேரமா நான் ஒருவிதமான மகிழ்ச்சியும் கூச்சமும் கலந்த மனநிலையில அமர்ந்திருந்தேன்; அந்த அளவுக்கு பாராட்டி தள்ளிட்டீங்க. உணர்ச்சிப் பெருக்கோட நிற்கிறேன், என்ன பேசுவது என்று தெரியாத நிலையிலே நின்று கொண்டிருக்கிறேன்.
அதிலேயும் நம்ம ஆசிரியர் பாராட்டோட சேர்த்து அன்பையும் பாசத்தையும் பொழிந்திருக்கிறார். குழந்தைக்கு எப்படி தாயின் முத்தமோ, அதுபோல திமுகவுக்கு தாய் கழகத்தினுடைய அன்பு முத்தம் இது. திராவிட மாடல் ஆட்சியில செஞ்ச சாதனைக்காக பாராட்டுனதுக்காக எடுத்துக்கிறதை விட, இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று அதற்காக வழங்கப்பட்டிருக்கக்கூடிய ஊக்கமா இந்த விழாவை எடுத்துக்கிறேன். அதற்கு தகுதி உள்ளவனா என்னை மேலும் வளர்த்துப்பேன்னு உங்களுக்கு முதல்ல உறுதி தர்றேன்.
தந்தை பெரியாருக்கு பிறகு, அன்னை மணியம்மையாருக்கு பிறகு பெரியார் கொள்கையை மலை போல காத்து வருபவர்தான் நம்ம ஆசிரியர் அவர்கள். இன்னும் சொல்லணும்னா என்னையும் காத்தவர் ஆசிரியர்தான். ஓராண்டு காலம் மிசா சிறைவாசத்தில அவர் பாதுகாப்புலதான் நான் இருந்தேன்; ஏன், இப்பவும் என்னை வீழ்த்த என் மீது வீசப்படக்கூடிய அவதூறுகளுக்கு ஆதாரங்களோடு தக்க பதிலடி தந்து அறிக்கைகள் வெளியிட்டு அந்த விமர்சன தாக்குதலை முறியடிக்கிற முதல் நபர் யார் என்று கேட்டால் ஆசிரியர் தான்!
என் மேல நீங்க எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்களோ அதே அளவுக்கு நானும் பாசத்தையும் மரியாதையும் வச்சிருக்கிறேன். அதனால உரிமையோடு சொல்றேன், உங்க வயசை மறந்து நீங்க கடுமையா உழைக்கிறீங்க, அவ்வப்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! இதை சொன்னா நீங்க கோபப்படுவீங்க, அதனால உடல் நலன்ல இன்னும் கூடுதலா நீங்க கவனம் செலுத்த வேண்டும் என்று தலைவர் கலைஞரின் மகனா உரிமையோடு கேட்கிறேன்.
பெரியார் அறிவுலகத்தை உருவாக்கியது எப்படி?

பெரியார் அறிவுலகத்தை கோவையின் அடையாளமாக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அடையாளமாக நம்ம திராவிட மாடல் ஆட்சியில அமைச்சோம். அதை உருவாக்குவதற்காக திராவிட மாடல் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கக்கூடிய அமைச்சர்கள், மற்ற அதிகாரிகள் கூட பலமுறை ஆய்வு கூட்டங்களை நடத்தி இருக்கிறேன்.
99 விழுக்காடு பணிகள் முடிந்திருந்த நிலையில் இங்கே வந்து அந்த பணிகளை எல்லாம் பார்வையிட்டு சென்ற போதுதான் தேர்தல் தேதி அறிவிப்பு வந்துச்சு. நான் மட்டுமல்ல, அப்போ பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு பத்து முறைக்கு மேல பெரியார் அறிவுலகத்தினுடைய ஆய்வு பணிகளுக்காக கோவைக்கு வந்திருப்பார்; அதையும் தாண்டித்தான் வந்திருப்பார். ஏன்னா நான் அந்த அளவுக்கு அவர்கிட்ட அதை பத்தின ஃபாலோ-அப் ஆக்ஷனை கேட்டுக்கிட்டே இருப்பேன்.
பெரியார் அறிவுலகம் எப்படி தோற்றம் அளிக்கணும்னு அதனுடைய அமைப்பு, அதனுடைய டிசைன், அதனுள்ளே இடம்பெற வேண்டிய அறிவியல் சம்பந்தமான பிரிவுகள், வாசல்ல முகப்புல தந்தை பெரியாருடைய சிலை எந்த மாதிரி அமையணும் என்பது வரை ஆலோசனைகளை வழங்கிக்கிட்டே இருந்தேன். அதுமட்டுமல்ல, இந்த மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை எப்ப பார்த்தாலும் பெரியார் அறிவுலகத்தினுடைய பணிகளை பத்தி நான் கேட்காமல் இருந்ததே இல்லை; அப்படி நான் கேட்கும்போது அடுத்தடுத்து என்ன திட்டங்கள் கோவைக்கு தேவைன்னு என்கிட்ட கேட்டு வாங்கிடுவார்.
கடந்த ஐந்து ஆண்டுகள்ல திராவிட மாடல் ஆட்சியில் கோவைக்குதான் நான் அதிக முறை அரசு விழாக்களுக்காக வந்திருக்கிறேன். செம்மொழிப் பூங்கா, ஜி.டி. நாயுடு மேம்பாலம், சி. சுப்பிரமணியம் மேம்பாலம் என பல சாதனைகளை இங்கே இருக்கிறது. நம்ம பேரை சொல்லக்கூடிய அளவுக்கு ஏராளமான பணிகள் இங்கே நடந்திருக்கு. அந்த பணிகளை எல்லாம் பொறுப்பா பார்த்துக்கிட்டவர்தான் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. அதுல மணிமகுடமா அமைந்ததுதான் பெரியார் அறிவுலகம்! எத்தனையோ சாதனைகளை இந்த 5 வருஷத்தில திராவிட மாடல் ஆட்சியை பயன்படுத்தி முதலமைச்சராக இருந்த அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி செய்திருக்கலாம்; ஆனால் என்னால் மறக்க முடியாத ஒரு சாதனையாக இந்த அறிவுலகம், தந்தை பெரியார் பெயரால் அமைந்திருக்கக்கூடிய அறிவுலகம் அமைந்திருக்கிறது.

இன்று நாம் பார்க்கக்கூடிய தமிழ்நாட்டை செதுக்கியதில் மிக முக்கியமாக பங்கு ஆற்றியவர் பெரியார். அவரால்தான் நாம் பகுத்தறிவின் ஒளியைப் பெற்றோம், சுயமரியாதை உணர்வைப் பெற்றோம், தமிழர்கள் அதிகாரத்தை அடைந்தோம், உரிமைகளை அடைந்தோம். அத்தகைய பெரியார் பெயரில் அறிவுலகத்தை அமைத்தது என்னுடைய கடமை; நன்றியை எதிர்பார்த்தோ பாராட்டை எதிர்பார்த்தோ நான் அதை செய்யல. இது ஆசிரியருக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.
பெரியார் பெயர் ஏன்?
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில தென் தமிழ்நாட்டின் அறிவாலயமா விளங்குகிற, லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறக்கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைச்சோம். மதுரையில அந்த சமயத்துல உலகமே டிஜிட்டல் ஆகிட்டு வரக்கூடிய சூழல்ல ‘நூலகங்கள் தேவையானா’னு ஒரு சிலர் கேட்டாங்க. ஆனா நாம் அமைக்கிற நூலகங்களை வெறும் புத்தகங்களை அடுக்கி வச்சிருக்கக்கூடிய இடமாக மட்டுமில்லாமல், நவீன வசதிகளை கொண்டதாக இருக்கணும் என்று முடிவெடுத்து வேலை செஞ்சோம்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்துட்டு, அதே மாதிரி கோவையிலும் திருச்சியிலும் அமைக்கலாம்னு முடிவெடுத்தோம். அப்போ சில அமைச்சர்கள் ‘கலைஞருடைய நூற்றாண்டு என்கிற காரணத்தால பெரிய பெரிய நகரங்கள்ல மாநகரங்கள்ல தலைவர் பெயரால அமைக்கலாம்’னு சொன்னாங்க. ஆனா நான்தான் ‘சென்னையில அண்ணா பேர்ல நூலகம் இருக்கு, மதுரையில் கலைஞர் பேர்ல அமைச்சிட்டோம்; கோவையில பெரியார் பெயரிலும், திருச்சியில் காமராஜர் பேரிலும் வைக்கலாம்’னு சொன்னேன். சொன்னபடியே செஞ்சு காட்டிட்டோம்!
இதைத் தொடர்ந்து நெல்லையில காயிதே மில்லத் பெயரிலும், கடலூர்ல அஞ்சலையம்மாள் பெயரிலும், சேலத்தில பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும் நவீன நூலகங்களை அமைக்கிற பணிகளையும் தொடங்கினோம். திமுக ஆட்சிலே முடிவான பல திட்டங்கள் காரணமே சொல்லப்படாமல் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சியில் ரத்து செய்யப்படுது. நெல்லை, கடலூர், சேலம் நூலகங்களுக்கு அந்த சூழ்நிலை வந்துடாமல் சீக்கிரமா பணிகளை முடிச்சு திறந்து வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த பெரியார் அறிவுலகமே துவக்க நிலையில் இருக்கிற திட்டமா இருந்திருந்தா இதுக்கும் மூடுவிழா நடத்த முயற்சி பண்ணி இருப்பாங்க; நல்ல வேலையாக நாம ஒரு 99 விழுக்காடு பண்ணி முடிச்சுட்டோம். அதனால வேறு வழி இல்லாம ஒப்புக்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி ஒரு தேதியில—ஜோசியர் சொன்ன தேதியில—வந்து திறந்து வச்சிருக்காங்க. ‘என்ன நீங்க எப்ப பார்த்தாலும் இந்த அரசை இப்படி விமர்சனம் பண்றீங்க’னு ஆளுங்கட்சிக்கு ஆதரவான சிலர் கேட்கறாங்க. இந்த ஆட்சியுடைய லட்சணம் அப்படி இருந்தா நான் என்ன செய்ய முடியும்? நான் மட்டும் மட்டுமா விமர்சிக்கிறேன், எல்லா தலைவர்களும் விமர்சிக்கிறாங்க, மக்கள் பேச ஆரம்பிச்சுட்டாங்க! இந்த குளறுபடி அரசு அடிக்கிற கூத்துக்களை எல்லாம் பார்த்துட்டு யாருதான் விமர்சனம் பண்ணாமல் இருக்க முடியும்?
எல்லாம் ஜோசியர்தான்?

முதலமைச்சர் என்ன டிரஸ் போடணும், அவருடைய அலுவலகம் எங்க இருக்கணும், அவர் என்ன பொட்டு வைக்கணும்—எல்லாத்தையுமே இந்த ஆட்சியில் ஜோசியர்தானே முடிவு பண்றாரு! ‘என்னுடைய ஆட்சியில் பவர் சென்டரே இருக்காது’னு பதவி ஏற்பு விழாவில முதலமைச்சர் விஜய் சொன்னாரே, ஆனா இன்னைக்கு என்ன நிலைமை? முதலமைச்சர் விஜயை டம்மி ஆக்கிட்டு, அவர் பின்னாடி இருக்கக்கூடிய கார்ப்பரேட் பவர் சென்டர்கள்தான் இந்த ஆட்சியை ஆட்டி படைக்கிறாங்க. இன்னும் சொல்றேன்னா, முதலமைச்சரை வச்சு இந்த பவர் சென்டர் வித்தை காட்டுற சர்க்கஸ்தான் தமிழகத்தின் காட்சி!
யாரெல்லாம் இந்த ஆட்சி வர வேண்டும் என்று வாக்களித்தார்களோ, அவங்க எல்லாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு புலம்பிட்டு இருக்காங்க. இவங்க ஆட்சிக்கு வந்து ஒரே மாசத்தில மின்வெட்டு பிரச்சனை வந்துருச்சு; மக்கள் எல்லாம் இரவு நேரத்தில பிள்ளை குட்டிகளோடு ரோட்டுக்கு வந்துட்டாங்க. இப்பவரை அவங்களால அந்த மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய முடியல. இந்திய நாட்டினுடைய குடியரசுத் துணைத் தலைவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போற போது கரண்ட் கட் ஆகுது; கேட்டா ‘ஜெனரேட்டர்லதான் ஓட்டுறோம்’னு அந்த துறை அமைச்சர் சொல்றார்! அதாவது ஜெனரேட்டர் தாங்கும் அளவுக்குதான் மின்சாரம் இருக்குனு அவரே ஒத்துக்கறார். அடுத்த நாள் இன்ஜினியர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்; என்ன கோமாளித்தனம்! அதுமட்டுமல்ல, இறந்த உடல்களை எல்லாம் கூட எரிக்க முடியாமல் மின்மயானத்தில கரண்ட் கட்டாகி மக்கள் புலம்பிட்டு இருக்காங்க.
கொலை, போதைப்பொருள், சிறுமிகள் மாயம், தப்பியோடும் கைதிகள்
இப்படி செயற்கையா மின்வெட்டை உருவாக்குவதற்கு எதற்காக? நம்ம திமுக ஆட்சியில குறைந்த விலைக்கு போட்ட ஒப்பந்தத்தை கேன்சல் பண்ணிட்டு, இப்ப அதைவிட ரெண்டு மடங்கு அதிக விலைக்கு வெளி மார்க்கெட்ல மின்சாரம் வாங்குறதை நியாயப்படுத்த பார்க்கிறாங்க; அதுக்காகத்தான் இந்த மின்வெட்டு நாடகம்!
மின்வெட்டு போலவே அறிவாள் வெட்டும் கொலையும் கொள்ளையும் தமிழகக் காட்சியில் தொடர்ந்து வந்து வெற்றி நடை போட்டுட்டு இருக்கு. சிவகங்கை, தூத்துக்குடி, தலைநகர் சென்னைனு எல்லா ஊர்லயும் மையப் பகுதியில சகஜமா கொலைகள் நடக்குது. இந்த ஆட்சியில், தொழில் நகரமாக இருந்த கோவையில ஒரு மாசத்தில 10 கொலைகள் நடந்து கொலை நகரமா மாறி இருக்கு!
அதுமட்டுமா? மூச்சுக்கு மூச்சு ‘தூய சக்தி ஆட்சி’னு தம்பட்டம் அடிச்சாங்களே, அது எப்படி எல்லாம் துர்நாற்றம் அடிக்குதுனு சமூக ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் ஒவ்வொரு ஆளும் பார்த்துட்டுதானே இருக்கிறோம்! போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்போம்னு சொல்லிட்டு இவங்களே ஹோல்சேலா உற்பத்தி பண்ணி ஒளிச்சு வச்சிருக்காங்க.
தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போறாங்க, பெற்றோர்கள் எல்லாம் பயத்துல நடுங்கிட்டு இருக்காங்க. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையா நடந்துட்டு இருக்கு. அதுவும் குற்றவாளிகள் யாருனு பார்த்தீங்கன்னா த.வெ.க. நிர்வாகிகள் தான்! பலபேர் அந்த லிஸ்ட்ல இருக்காங்க. இளைஞரணி, மாணவரணி, மகளிரணி மாதிரி த.வெ.க.வுல பாலியல் குற்றவாளிகளுக்கும் போதைப்பொருளுக்கும் தனிப் பிரிவு ஒன்னு உருவாக்கணும்!
இவங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்கத்தான் வக்கில்லைனு பார்த்தா, சிறையில் இருக்கிற குற்றவாளிகள் எல்லாம் தப்பிச்சு போயிட்டு இருக்காங்க. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே சமயத்துல 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச்சு ஓடுன வரலாற்று சாதனை இந்த தூய சக்தி ஆட்சியிலதான்—விஜய் ஆட்சியிலதான்—நடந்திருக்கு! அதுக்கு முன்ன சென்னை புழல் சிறையில ரெண்டு கைதிகள் சுவரேறி குதிச்சு தப்பிச்சாங்க. ‘கதவை திறக்க சொல்லி’ பாட்டு பாடிட்டு இப்ப ஜெயிலைத் திறந்து விட்டுட்டு இருக்காங்க! இதே கோவையில ஏற்கனவே தப்பிச்சு போன வழக்கில கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளியை திரும்பவும் தப்பிக்க விட்டுருக்காங்க.
வயிற்றெரிச்சலை சம்பாதிச்சுட்டாங்க
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்கு போகுது; இதுதான் த.வெ.க. அரசாங்கம்! திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே டாப்ல இருந்தது நம்ம தமிழ்நாடு; அஞ்சே மாசத்துல அடிமட்டத்துக்கு போயிடுச்சு. ‘மாஸ்டர் மாற்றங்கள் வரும்’ பாஸ்டர்னு த.வெ.க. கட்சியினர் பாடுனாங்களே, அதுக்கு அர்த்தம் அப்ப புரியல, இப்பதான் புரியுது—ஐந்து ஆண்டுகள் அடைய வேண்டிய அவமானத்தை அஞ்சே மாசத்தில் வாங்கிட்டு வெட்கமே இல்லாம வெற்றித் தமிழர்கள்னு விழா எடுக்குறாங்களா?
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் தமிழ்நாடு எல்லா துறையிலும் படுபாதாளத்துக்கு போயிடுச்சு. எல்லா தரப்பு மக்களும் வேதனையில் இருக்காங்க—விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், கூலித் தொழிலாளர்கள் என எல்லாரோட வயித்துலயும் அடிச்சுட்டாங்க! ஆறு மாசத்துல மக்களின் வயிற்றெரிச்சலை சம்பாதிச்சுட்டாங்க.
இதையெல்லாம் சரி செய்ய முதலமைச்சர் ஏதாவது பண்ணுவாரான்னு பார்த்தா, அவர் என்ன பண்றாரு? கோட்டு-சூட்டு போடுறாரு, ஜோசியர் சொன்ன பட்டுவேட்டி சட்டை கட்டுறாரு! ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கும் புழல் சிறைச்சாலைக்கும் போய் பரிகார பூஜை பண்றாரு. கான்வாயில வந்து பெரியார் அறிவுலகம், சென்னை மெட்ரோ என திமுக அரசு கட்டி முடிச்ச திட்டங்களை திறந்து வச்சுட்டு கை அசைக்கிறாரு. ’10 டு 5 வேலைக்கு போறேன்’னு பாவனை பண்றாரு—அதுவும் சனிக்கிழமை லீவு! முதலமைச்சர் பொறுப்பு 10 டு 5 ஆபீஸ் வேலை இல்லை!
முதலமைச்சர் விஜய் அவர்களே, அங்கிள் விஜய் அவர்களே, முதலமைச்சர் பொறுப்பு 10 டு 5 ஆபீஸ் வேலை இல்லை; அதுக்காக ஒட்டுமொத்தமாக தன்னை ஒப்படைச்சுட்டு வாழணும். இது ஒன்னும் சினிமா சூட்டிங் மாதிரி கால்ஷீட் மட்டும் கொடுத்துட்டு செட்டுக்கு போயிட்டு வர்ற வேலை கிடையாது, முதல்ல அதை புரிஞ்சுக்கணும்.
அவர் கஷ்டப்பட்டு பாவனை காட்டிட்டு இருந்தா, அதை ஓவர்டேக் பண்ற மாதிரி புதுப் பிரச்சனை வரக் கிளம்பி இருக்கு. தினமும் ஏதாவது ஒரு கிரிமினல் வழக்குல த.வெ.க. நிர்வாகிகள் சிக்கிட்டு இருக்காங்க; டெய்லி டிவில பார்க்கிறீங்க, பத்திரிகையில படிக்கிறீங்க. அந்த கட்சி மாவட்ட செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினரும் பணம் கேட்டு மிரட்டுகிற வீடியோ, ஆடியோ வெளியாகுது—ஆளுக்கு வசூல் ராஜாவா இருக்காங்க! பெண் நிர்வாகிகளுக்கு இன்ஸ்டாகிராம்ல ஆபாச மெசேஜ் அனுப்பின ஆதாரங்கள் வெளிவருது. த.வெ.க. அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் போடுற ரீல்ஸ்களை மிஞ்சுகிற வகையில அவங்களோட லீலைகளை அம்பலப்படுத்தக்கூடிய ரீல்ஸ்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்குது!
இந்த கேவலங்களை எல்லாம் மறைக்கத்தான் நம்ம முன்னாள் அமைச்சர் நேரு வீட்ல திரும்பத் திரும்ப ரைடு பண்றாங்க. திருச்சியில இடைத்தேர்தல் வேற வருது; அதுக்காக ஷோ காட்ட இதெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. அதுமாதிரியான மிரட்டலுக்கு திமுக பயந்து பின்வாங்கியதாக வரலாறே கிடையாது! அழுத்த அழுத்ததான் நாங்க மேலே எழுவோம், அதுதான் திமுகவின் டி.என்.ஏ!
ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கணும்? அந்த பொறுப்புக்குரிய பொறுப்போடு செயல்படணுமா வேண்டாமா? கடந்த திமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் லாக்கப் மரணம் அடைந்தார். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கக்கூடியவன் என்ற முறையில் நான் என்ன பண்ணேன்? காவலர்கள் சிலர் செய்த தவறுக்கு அந்த இளைஞனுக்கு ஆறுதல் சொல்லிட்டு, அந்த இளைஞனை பெற்றெடுத்த தாயார்கிட்ட டெலிபோன் பண்ணி வருத்தம் தெரிவிச்சேன், சாரி கேட்டேன்! நானே அந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டேன். ஆனா இன்னைக்கு என்ன நிலைமை? முதலமைச்சர் எந்த தவறுக்காவது பொறுப்பேற்று பதில் விளக்கமோ பதிலோ கொடுக்கிறாரா? கிடையாது!
பல நூறு கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை வச்சிருந்த த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் டி.ஆர்.ஐ. கைது செஞ்சிருக்காங்க. கட்சி தலைவரான விஜய், ஹானரபிள் சிஎம் அங்கிள் விஜய் இதைப் பற்றி விளக்கம் அளிக்கணுமா இல்லையா? மாநில அரசின் காவல்துறை பூபாலனை கைது செய்யாதது ஏன்? முதலமைச்சரான விஜய்தான் இதற்கும் பொறுப்பேத்துக்கணும். பாலியல் குற்றங்கள்ல அவர் கட்சிக்காரங்க தொடர்ந்து சிக்கிறாங்க; அவங்களுக்கு இவர் இதுவரை அறிவுறுத்தல் ஏதாவது கொடுத்தாரா? லாக்கப் மரணங்கள் பற்றி வாய் திறந்தாரா? பத்திரிகைக்காரங்களை பார்த்தாலே பயந்து ஓடுறவரா முதலமைச்சர் விஜய் இருக்கிறார். இவ்வளவு பலவீனமான முதலமைச்சரை தமிழ்நாடு இதுவரை பார்த்ததே இல்லை. காரணம், ஊடகங்களை சந்தித்தால் அவங்க என்ன கேட்கிறாங்கனு இவருக்கு புரியாது, அப்ப இன்னும் எக்ஸ்போஸ் ஆகி நடுங்குறாரு!
ஆனா அவர் இப்ப நடிகர் விஜய் கிடையாது, முதலமைச்சர் விஜய்! மக்களுடைய எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டேன்னு அவர் இருக்க முடியாது, அவருக்கு அந்த சாய்ஸ் கிடையாது; பதில் சொல்வது அவருக்கு கடமை! நல்லா ரிகர்சல் பார்த்துட்டு வேன் மேலே ஏறி ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைதான் பேசுவாரா? இவர் பேசணும்னா மாசம் ஒருமுறை இடைத்தேர்தல் நடத்தணுமா? அப்பக்கூட அவர் வாயில இருந்து பதில் எதுவும் வராது. எதைக் கேட்டாலும் அவர்கிட்ட இருந்து வரக்கூடிய ஒரே பதில் என்ன தெரியுமா? ‘திமுக, திமுக, திமுக’! பாதி ராத்திரியில யாராவது எழுப்பி கேட்டா கூட ‘திமுக’ன்னு சொல்லிட்டுதான் இருந்திருப்பார்!

தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்
த.வெ.க. அமைச்சர்கள் எல்லோரும் என்ன பண்றாங்கன்னு யாருக்கும் தெரியல, மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. இதுக்கு முன்னாடி திமுக ஆட்சியில் வேலைகள் எப்படி எல்லாம் வேகமா நடந்துச்சுன்னு அதை கம்பேர் பண்ணி பேச தொடங்கிட்டாங்க. இப்போ சிஎம் சார் சினிமாவுல நடிக்கும்போது ஒரு ஃபார்முலா வச்சிருந்தார்; என்ன ஃபார்முலா தெரியுமா? அவருடைய ஆன்லைன் விசிறிகள் மூலமா சக நடிகர்கள் மேலே அவதூறை கிளப்பிட்டு அவர் ஜெயிச்சிடுவாரு; அதே ரூட்ல அரசியல்ல ஒரு முறை ஜெயிச்சிட்டாரு! தமிழ்நாட்டு மக்களை இரண்டாவது முறையும் அவரால் உறுதியாக ஏமாற்ற முடியாது, மக்கள் ஏமாற மாட்டாங்கன்னு நான் நம்புறேன்.
மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு காரணங்களால் தமிழ்நாட்டின் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மாசத்துக்கு 5,000-லிருந்து 10,000 ரூபாய் வரை கூடுதலா செலவு பண்ண வேண்டிய கஷ்டத்துல இருக்காங்க. இப்போ ஒரு கொத்தமல்லி கட்டு எவ்வளவு தெரியுமா? ஒரு கொத்தமல்லி கட்டு 30 ரூபாய்! அரிசி, காய்கறிகளை வாங்குவதற்கே மக்களால் முடியல; பண்டிகை காலத்தில் கூட அவங்களால கூடுதலா செலவு செய்ய முடியல. அவங்களோட கண்ணீரே இந்த ஆட்சியை முடிச்சு வச்சிடும். இந்த ஆட்சி நீடிக்கிறது தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல.
இயற்கை பேரிடர் வந்தா மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடுவாங்க; அதுமாதிரி த.வெ.க. ஆட்சிக்கு இப்ப ரெட் அலர்ட் விடப்பட்டு, கூடிய விரைவிலேயே இந்த ஆட்சிக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கிறதுதான் தமிழ்நாட்டின் அறிவியக்கத்திற்கு நல்லது!
இங்கே இளைஞர்கள் வந்திருக்கீங்க. இந்த தேர்தல்ல பல இளைஞர்கள் ‘மாற்றம் மாற்றம்’னு சொல்லி வீட்ல இருக்கிறவங்களை எல்லாம் ஓட்டு போட வச்சாங்க. ஆனா கொலையும் பாலியல் வன்முறையுமாக இருக்கக்கூடிய இந்த ஆட்சியின் தவறுகளை அவங்களுக்கு புரியும் மாதிரி எடுத்து சொல்லுங்க. நிறைய பேர் பாலிடிக்ஸ் பேச ஆரம்பிச்சுட்டாங்கனு சொல்றாங்க; அவதூறுகளையும் பொய்யையும் போலி வீடியோக்களையும் பரப்பி ஆளுங்கட்சி செஞ்சுட்டு இருக்கிறது ஹெல்த்தி பாலிடிக்ஸ் அல்ல! எது ஹெல்த்தி பாலிடிக்ஸ்னு மக்களுக்கு புரியவையுங்க.
இன்னைக்கு போன்லதான் இளைஞர்களும் பெண்களும் அதிக நேரம் செலவழிக்கிறாங்க. நம்ம போனுக்கு வர்ற மெசேஜ்களும் இன்ஃப்ளூயன்ஸர் வீடியோக்களும் வெறும் தகவல்கள் மட்டும்தான். தகவலை தெரிஞ்சுக்கிறதற்கும் உண்மையை புரிஞ்சுக்கிறதற்கும் நிறைய வேறுபாடு இருக்கு என்பதை குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் எல்லோரும் உணரணும். உண்மையைப் பார்த்து பொய் பயப்படும், வெளிச்சத்தைப் பார்த்து இருள் பயப்படும்; அதுபோலதான் த.வெ.க.வின் மூர்க்கத்தனமும் அறிவு செயல்பாடுகளையும் நூலகங்களையும் பார்த்து பயப்படுது!
தமிழ்நாட்டின் சமூகப் பார்வையும் தனித்தன்மையும் தளர்ந்துவிடாமல் பெரியார் அறிவுலகம் போன்ற நூலகங்கள் பாதுகாக்கட்டும்; அறிவியல் பார்வை தழைக்கட்டும்!” என்று தனது உரையை நிறைவு செய்தார்.









