டெல்லி பேரணி : பங்கேற்காத தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் சஸ்பெண்ட்!

By Kavi

|

Published on 4 Nov 2026, 11:35 PM

டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பேரணியில் பங்கேற்காத இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் 60 பேர், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேர் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 10 பேர், குஜராத்த்தில் இருந்து சுமார் 60 பேர் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 35 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இளைஞர் காங்கிரஸின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான பேரணியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், பல நிர்வாகிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேரணியில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பேரணியில் நிர்வாகிகளின் வருகையை உறுதி செய்வதற்காக டெல்லி மின்டோ சாலையில் பார்கோடு ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. நிர்வாகிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள், இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான ‘With IYC’ செயலி மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் பேரணியில் பங்கேற்பதற்காக மின்டோ சாலையில் சுமார் 15,000 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டதாக அக்கட்சி தெரிவித்தது. ஆனால், செயலியில் வெறும் 2,831 பேர் மட்டுமே தங்களது வருகையைப் பதிவு செய்திருந்தனர்.

தொழில்நுட்பம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமை, ஆர்வமின்மை மற்றும் மின்டோ சாலை முதல் ராம்லீலா மைதானம் வரையிலான பகுதிகளில் நிலவிய குறைவான இணைய சேவை ஆகியவை வருகைப் பதிவில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கூறுகையில், பேரணியில் 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றதாகத் தெரிவித்துள்ள்ளார்.

மேலும், தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் சில நிர்வாகிகள் அமைப்பின் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்றும், பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குப் பதிலாகக் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்படும் தொண்டர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் திரளவில்லை. 

இந்தநிலையில், பாஜக தரப்பில் பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கூறுகையில், “ராம்லீலா மைதானத்தில் 40 சதவீத சேர்கள் காலியாக இருந்தன. 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என ராகுல் காந்தியும் அவரது குழுவினரும் தெரிவித்திருந்தனர். ஆனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த 28,000 இருக்கைகளில் சுமார் 5,000 முதல் 7,000 இருக்கைகள் காலியாக இருந்தன” என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel