எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனுவை சபாநாயகர் கிடப்பில் போட முடியாது- ம.பி. வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

By Mathi

|

Published on 4 Nov 2026, 9:43 PM

Supreme Court-Disqualify Case

எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்களை சபாநாயகர் நீண்டகாலம் கிடப்பில் போட முடியாது என்று மத்திய பிரதேச மாநில வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பினா தொகுதியில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிர்மலா சப்ரே. ஆனால் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ம.பி. முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் பாஜகவில் இணைவதாக நிர்மலா சப்ரே அறிவித்தார். இதனால் பாஜகவுக்கு தாவிய நிர்மலா சப்ரேவை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் 2024-ம் ஆண்டு ஜூலையில் சபாநாயகரிடம் மனு அளித்தார்.

ADVERTISEMENT

ஆனால் நிர்மலா சப்ரே, தாம் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்யவில்லை; பாஜகவிலும் முறைப்படி இணையவில்லை என்று மறுத்து வந்தார். இந்த நிலையில், தகுதி நீக்க மனு மீது சபாநாயகர் உரிய முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்தார். இதற்கு எதிராக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தை உமங் சிங்கார் அணுகினார்.

அப்போது, தகுதி நீக்க மனு மீது சபாநாயகர் விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த வழக்கில் அவசரமாக உத்தரவிட வேண்டியதில்லை என்றும் கூறி ம.பி. உயர்நீதிமன்றம் உமங் சிங்காரின் மனுவை டிஸ்மிஸ் செய்தது.

ADVERTISEMENT

இதை எதிர்த்து உமங் சிங்கார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று (நவம்பர் 4) தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உமங் சிங்கார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விவேக் தன்கா, காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. பாஜகவுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார். இது கட்சி மாறியதற்காக தகுதி நீக்கம் செய்யக் கோரும் தெளிவான வழக்கு. ஆனால் சபாநாயகர் இதுவரை முடிவெடுக்கவில்லை என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

அப்போது, ”ஒரு வழக்கில் அவசரம் இல்லை என்று நீதிமன்றம் கருதினாலும், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்களை விரைவாக முடிக்க வேண்டும்” (Even in a case where the court finds that there is no urgency, issues like these should be dealt with expeditiously) என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், “சட்டசபையின் பதவிக்காலம் முடிய இன்னும் காலம் இருக்கிறது என்பதற்காக இதுபோன்ற மனுக்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே தெலுங்கானாவில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை முடிக்க சபாநாயகருக்குக் காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து நிர்மலா சப்ரே மீதான தகுதி நீக்க மனுவை மத்தியப் பிரதேச சபாநாயகர் 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில்..

தமிழகத்திலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பான வழக்கில், கடந்த அக்டோபர் 13-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு 2 மாதக் கெடு விதித்திருந்தது. மேலும், 7 நாட்களுக்குள் விசாரணைக்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச வழக்கிலும் தகுதி நீக்க மனுவை நீண்டகாலம் கிடப்பில் போடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel