நா.மணி
ஒரு சில திரைப்படங்களின் காட்சிகள், பல ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய சமூக, அரசியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.
அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்று பெர்னார்டோ பெர்டோலூச்சி இயக்கிய டால்ஸ்ட் எம்பரர்
(The Last Emperor). சீனாவின் கடைசி மன்னரான புயியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இத்திரைப்படம் அதிகாரத்தின் நிலையாமையை மிக அழுத்தமாகப் பேசும் படம். ஒரு காலத்தில் சீனப் பேரரசின் மன்னராக, தடைசெய்யப்பட்ட நகரத்தின் (Forbidden City) மையத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் வாழ்ந்தவர் புயி.

காலம் அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுகிறது. பின்னாளில் தான் ஒரு காலத்தில் மன்னராக வீற்றிருந்த அதே அரண்மனைக்கு ஒரு சாதாரணப் பார்வையாளராகத் திரும்பி வருகிறார். அரண்மனை இருக்கிறது. அதன் வரலாறு இருக்கிறது. ஆனால் அவருடைய அதிகாரம் மட்டும் இல்லை.
இந்தக் காட்சி அதிகாரம் என்பது நிரந்தரமானதல்ல என்பதை உணர்த்துவதோடு, மனிதர்களின் இடங்களும் அடையாளங்களும் காலத்தால் எவ்வாறு மாற்றப்படுகின்றன என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

இந்தத் திரைப்படக் காட்சி அண்மைக்கால ஜனநாயக அரசியலின் ஒரு விசித்திரமான நடைமுறையையும் நினைவுபடுத்துகிறது.
ஒரு ஆட்சிக்காலத்தில் ஒரு திட்டம் உருவாக்கப்படுகிறது. அதற்கான தேவை கண்டறியப்படுகிறது. மிக மிக அத்தியாவசியமான, மிக நீண்ட காலம் பயனுள்ள திட்டங்களாகக் கூட இருக்கலாம். அதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நிதி ஒதுக்கப்படுகிறது. அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் எனப் பலருடைய உழைப்பும் பங்களிப்பும் இணைகின்றன. சில நேரங்களில் பல்வேறு தடைகளைக் கடந்து கட்டுமானப் பணிகள் முடிக்கப்படுகின்றன. மக்கள் பயன்பாட்டிற்குத் தயாராக ஒரு பொதுத்திட்டம் நிறைவுபெறுகிறது.
இதற்கிடையில் ஆட்சி மாற்றம் நிகழ்கிறது.
திட்டம் தயாராகி மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது
திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால் திறந்து வைப்பது புதிய ஆட்சியாளர்கள். திட்டத்தை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் பின்னால் இருந்தவர்கள் திறப்பு விழா மேடையில் இருக்க முடிவதில்லை. அவர்களுக்கான அழைப்பும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
சில நேரங்களில், தாங்கள் உருவாக்கிய திட்டத்தின் திறப்பு விழாவிற்கு முந்தைய நாளே வந்து ஆசை ஆசையாய் பார்த்துவிட்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனைக் காண நேர்ந்தவர்கள் பார்க்க நேர்ந்தவர்களுக்கு ஒருவிதமான நெகிழ்ச்சி மனதில் ஒட்டிக் கொள்கிறது.
மறுநாள் அந்தத் திட்டம் திறக்கப்படுகிறது. புகைப்படங்கள் வெளியாகின்றன. பாராட்டுகள் குவிகின்றன. திட்டத்தைத் திறந்து வைத்தவர்கள் அதன் சாதனையாளர்களாக ஊடகங்களில் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால் அந்தத் திட்டம் உருவாவதற்குப் பின்னால் இருந்தவர்களின் உழைப்பும் பங்களிப்பும் பொதுவெளியில் பேசப்படுவதில்லை. இது ஒரு வகையில் தி லாஸ்ட் எம்பரர் திரைப்படத்தின் காட்சியைப் போன்றதே.
ஒரு காலத்தில் அந்தத் திட்டத்தின் உருவாக்கத்திற்குப் பொறுப்பேற்றிருந்தவர்கள், பின்னாளில் அதே திட்டத்தை யாரும் பார்க்காத வேளையில் பார்வையிடும் பார்வையாளர்களாக தள்ளப்படுகின்றனர். அரண்மனையை இழந்த மன்னரைப் போல, தாங்கள் உருவாக்கிய பொதுச் சொத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க முடியாதவர்களாகிறார்கள்.
ஆனால் இங்கு ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. திரைப்படத்தில் மன்னர் அதிகாரத்தை இழக்கிறார். ஜனநாயகத்தில் ஆட்சியை இழந்தவர்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை மட்டுமே இழக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய திட்டத்தின் மீதான வரலாற்றுப் பங்களிப்பை இழக்க வேண்டிய அவசியமில்லை.
ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான ஏற்பாடு மட்டுமல்ல. முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களைத் தொடர்வதும், அவற்றில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்துவதும் ஜனநாயகத்தின் அடிப்படையான பண்புகளாகும்.
ஒரு புதிய ஆட்சி முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தைத் திறந்து வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்தத் திட்டத்தை உருவாக்கியவர்களின் பங்களிப்பை மறைப்பதும், அவர்களை விழாவிலிருந்து விலக்கி வைப்பதும் அரசியல் நாகரிகமாகாது.

பொதுத்திட்டங்கள் எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் சொந்தமானவை அல்ல. அவை மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படுபவை. ஓர் ஆட்சி திட்டமிடலாம்; இன்னோர் ஆட்சி நிறைவேற்றலாம். மற்றோர் ஆட்சி விரிவுபடுத்தலாம். இறுதியில் அவை அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானவை. அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கலாம். தேர்தல் அரசியலில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களில் தொடர்ச்சியும் பரஸ்பர அங்கீகாரமும் இருக்க வேண்டும். ஒரு திட்டத்தைத் திறந்து வைப்பதன் மூலம் அதன் முழுப் பெருமையையும் ஒருவர் பெற்றுவிட முடியாது. அதேபோல், திறப்பு விழாவில் பங்கேற்காததால் அதன் உருவாக்கத்தில் பங்களித்தவர்களின் உழைப்பும் அழிந்துவிடாது. அதிகாரம் மாறலாம். ஆட்சியாளர்கள் மாறலாம். திறப்பு விழா மேடையில் இருப்பவர்கள் மாறலாம். ஆனால் ஒரு திட்டத்தை உருவாக்கிய வரலாற்றை மாற்றிவிட முடியாது.
ஜனநாயகத்தில் உண்மையான அரசியல் முதிர்ச்சி என்பது முந்தைய ஆட்சியின் திட்டங்களைத் திறந்து வைப்பதில் மட்டுமல்ல; அந்தத் திட்டங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பையும் வெளிப்படையாக அங்கீகரிப்பதில்தான் இருக்கிறது. அவர்கள் இணைந்து திறப்பு விழாவில் பங்கேற்கலாம். அத்தகைய சூழ்நிலை வரும் காலங்களில் உருவாக வேண்டும்.
இல்லையெனில், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் புதிய புதிய தி லாஸ்ட் எம்பரர் காட்சிகளை நமது பொதுவாழ்வில் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். திட்டத்தைத் திறந்து வைப்பவர் வரலாற்றில் இடம்பெறலாம். ஆனால் திட்டத்தை உருவாக்கியவர்களையும் வரலாறு மறந்துவிடாது.









