கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டை தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அந்தி சாய்ந்தால் மது போதையில் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், தனது ரத்தத்தைப் பரிசோதிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தன்னையும் தவெகவையும் அரசியல் ரீதியாக டேமேஜ் செய்யவே இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்வதற்காக இன்று காலை வந்திருக்கிறோம். இந்தப் பேருந்து நிலையம் தரமற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்திருக்கிறார்கள். சட்டமன்றத்திலும் நான் பலமுறை பேசியிருக்கிறேன்.
அதன் தொடர்ச்சியாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்திருக்கிறேன். இங்கு முறையான வடிகால் வசதி இல்லை. தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் சரியாக இல்லை. இவற்றையெல்லாம் அதிகாரிகளிடம் குறைகளாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்?
செய்தியாளர்: பெண் மாவட்ட ஆட்சியருக்கு அவதூறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக எம்.பி. கனிமொழியும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
அருள் விக்னேஷ்: அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அந்த மாதிரியான செயலில் நான் ஈடுபடவே இல்லை. ஏன் இப்படித் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதற்கு மேல் இதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை.
செய்தியாளர்: இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் உங்களை அழைத்துக் கண்டித்ததாகவும், அதனால்தான் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
அருள் விக்னேஷ்: இல்லை அண்ணா. அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது நான் எங்கே இருந்தேன் என்பதை எடுத்துப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் நான் கள்ளக்குறிச்சியில் இல்லை. சென்னையில் கூட்டங்களில் பங்கேற்றிருந்தேன். அதுதான் விஷயம். இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. வேண்டுமென்றே ஏன் இப்படித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் நான்தான். கள்ளக்குறிச்சி தொகுதியில் நான் பணியாற்றி வெற்றி பெற்றிருக்கிறேன். இதனால் என்மீதும் எங்கள் கட்சிமீதும் வன்மம் அதிகமாக இருக்கிறது. என்னையும் எங்கள் கட்சியையும் மக்கள் மத்தியில் டேமேஜ் செய்ய வேண்டும் என்பதற்காகச் சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இப்படிச் செய்வதால் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்போதும் சொல்கிறேன். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். மக்கள்தான் எங்களுடைய உண்மையான சக்தி.
மக்களிடம் கிடைத்த உண்மையான வெற்றியால்தான் இப்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெறுகிறது. நாங்கள் ஒருபோதும் அதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்களும் மக்களுடன் இருக்கிறோம்.
அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கைக்குப் பதில்
செய்தியாளர்: மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால், எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்றும் பார்க்காமல் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று காலை கூறியிருக்கிறாரே?
அருள் விக்னேஷ்: மீண்டும் அதைத்தான் சொல்கிறேன். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஏன் இப்படிப் பொய்யான தகவலைச் சமூக வலைதளங்கள் முழுவதும் பரப்புகிறார்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை. உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் புகார் கொடுக்கட்டும். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்கட்டும்.
செய்தியாளர்: உங்கள் மீது செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படியொரு குற்றச்சாட்டு இல்லை என்பதைச் செய்தியாளர்களை அழைத்து ஆதாரத்துடன் உடனடியாக நிரூபிக்காமல் தாமதப்படுத்துவது ஏன்?
அருள் விக்னேஷ்: ஒரு சின்ன விஷயம். எங்கள் முதலமைச்சர் சொல்வதுபோல நானும் சொல்கிறேன். “Ignore the Negativity.” தவறான செய்திகளுக்கெல்லாம் நாம் ஏன் பதில் கொடுக்க வேண்டும்? தேவையில்லாமல் தொடர்ந்து அவதூறுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஏதாவது நடந்திருந்தால் பரவாயில்லை. ஆனால், இப்படியொரு கேவலமான விஷயத்தை உருவாக்கி, என்னுடைய பெயரையோ எங்கள் கட்சியின் பெயரையோ டேமேய் செய்ய வேண்டும் என்பதற்காகச் செயல்படுகிறார்கள். இது முழுவதுமாகப் பரவ வேண்டும் என்பதற்காகவே கணினி முன்னால் உட்கார்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது. என்னுடைய மக்கள் பணியைச் செய்துகொண்டிருக்கிறேன். இப்போதும் பாருங்கள், பேருந்து நிலையத்தை ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். எல்லா இடங்களுக்கும் சென்று மக்களிடம் கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதுபோன்ற அவதூறுகளுக்காக நேரத்தைச் செலவிட முடியாது.
செய்தியாளர்: அவதூறான கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?
அருள் விக்னேஷ்: கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். புகார் அளித்திருக்கிறேன். நாம் இப்போது நின்றுகொண்டிருப்பது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம். கேமராவைத் திருப்பிக் காட்டுங்கள். பின்னால் பாருங்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுபோல முழுவதுமாக வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்திருக்கிறார்கள். இந்தப் பேருந்து நிலையத்தால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. இதில் பெரிய முறைகேடு நடந்திருக்கிறது.
இந்தத் தவறை நான் கண்டுபிடித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இதைத் தெரிந்துகொண்ட எதிர்க்கட்சியினரும், இந்த இடத்துடன் தொடர்புடையவர்களும் என்னை டேமேஜ் செய்ய நினைக்கிறார்கள். எப்படியாவது சமூக வலைதளங்களில் என்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பி, கட்சி ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் என்னுடைய பெயரைக் கெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்.
இந்தப் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்திருக்கிறார்கள். பின்னால் பாருங்கள். ஊர் எங்கேயோ இருக்கிறது. பேருந்து நிலையம் எங்கேயோ இருக்கிறது. ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது என்றால் அது இந்தக் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம்தான்.
இந்தப் பேருந்து நிலையம் குறித்து நான் சட்டமன்றத்தில் என்ன பேசினேன் என்பது உங்களுக்கும் மக்களுக்கும் தெரியும். புதிதாக எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரத்தை நான் கையில் எடுத்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் விளைவாகத்தான் என்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.
அந்தி சாய்ந்தால் மது போதையா?
செய்தியாளர்: அந்தி சாய்ந்தாலே நீங்கள் மது போதையில் மயங்கிவிடுவதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு எழுகிறதே?
அருள் விக்னேஷ்: சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். நான் எப்போதும் மக்கள் பணியில்தான் இருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். அலுவலகத்தில்தான் இருக்கிறேன். வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. வேண்டுமானால் என்னுடைய ரத்தத்தைப் பரிசோதனை செய்யச் சொல்லுங்கள். அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.
தேவையில்லாமல் இப்படிப் பேசுகிறார்கள். இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் என்னைப் பற்றி என்னென்ன பேசினார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுடைய ஒரே நோக்கம் கீழ்த்தரமான அரசியல் செய்வதுதான்.
‘Dirty Politics Party’ யார்? செய்கிறார்கள் என்பது தெரியும். கீழ்த்தரமான அரசியல் செய்யும் கட்சி எது என்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் எந்த அளவுக்குக் கீழ்த்தரமாகச் செல்வார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
நாங்கள் உண்மையாக இருக்கிறோம். மக்களுக்காகப் பணியாற்றுவதற்காக மட்டும்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். வேறு எதற்காகவும் வரவில்லை.
செய்தியாளர்: இதுபோன்ற அவதூறுகளுக்குப் பின்னால் யார் இருப்பதாக நினைக்கிறீர்கள்?
அருள் விக்னேஷ்: தெரியவில்லை அண்ணா. அதிகபட்சமாக எதிர்க்கட்சியினர்தான் இருப்பார்கள். எதிர்க்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் இன்னொரு கட்சியும் இருக்கிறது. அந்தக் கட்சியும் சேர்ந்துதான் இதைச் செய்திருக்கலாம். முன்பு தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் பிரதானமாக இருந்தன.
இப்போது தவெக வந்த பிறகு எல்லாக் கட்சிகளும் எங்களுக்கு எதிர்க்கட்சிகள்தான். எல்லாக் கட்சிகளும் எங்களுக்கு எதிராக இப்படித்தான் செயல்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால், இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற முழு விவரமும் தெரியவில்லை. காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. கூறினார்.









