அன்பில் மகேஷ் ஜாமீன் மனு டிஸ்மிஸ்- சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Mathi

|

Published on 10 Nov 2026, 12:52 PM

Anbil Mahesh Bail Plea Dismissed

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகப் பணம் வசூலிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று (நவ. 10) தள்ளுபடி செய்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்த வழக்கில் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அக். 26-ந் தேதி கைது செய்தனர். முன்னதாக, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், சாட்சிகளைக் கலைக்கவோ தலைமறைவாகவோ வாய்ப்பில்லை என்றும் வாதிடப்பட்டது. அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், இந்த வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, முத்துக்குமார் என்பவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும், சரவணன் என்பவர் பணத்தை அன்பில் மகேஷின் வீட்டுக்குக் கொண்டு சென்றதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்தக் குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஷ் தரப்பு மறுத்தது. இந்த விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவ. 10-ந் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவை இன்று (நவ. 10) நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கெனவே அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவ. 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel