தமிழக அரசு வங்கி கணக்குகளில் ஆன்லைனில் ரூ.22.10 கோடி கொள்ளை?

By Mathi

|

Published on 10 Nov 2026, 10:49 AM

Tamil Nadu Govt Bank Accounts_

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி இணையவழியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் சுகாதார நல மையங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது தொடர்பாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கிராமப்புற சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் சுகாதார நல மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையமும் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான நிதி ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில்,

  • ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி
  • நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடி
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.22.10 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அரசுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு வேறு வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப் பணிகளுக்கான நிதிப் பரிவர்த்தனைகள் சென்னையில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன. சுகாதார நல மையங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறையில் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளுக்குள் இணையவழியில் ஊடுருவி, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பணம் மாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசு அலுவலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், இணையவழிப் பரிவர்த்தனை அனுமதிகள் ஆகியவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார், புதுச்சேரியில் நடைபெற்ற மற்றொரு பெரிய இணையவழிப் பண மோசடி குறித்தும் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 260 பேருக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.8.16 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஏற்கெனவே இருந்த இருப்புத் தொகையையும் சேர்த்து ரூ.8.85 கோடி வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகப் புகார் எழுந்தது.

ADVERTISEMENT

இந்த மோசடி தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி திருடப்பட்ட சம்பவத்துக்கும் புதுச்சேரி மோசடிக்கும் ஒரே கும்பல் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

இதில் நைஜீரியாவைச் சேர்ந்த இணையவழி மோசடிக் கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

கிராமப்புற மக்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட அரசு நிதியே இணையவழி மோசடியில் மாயமாகி இருப்பதால் அரசு வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பு மற்றும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கண்காணிப்பு நடைமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel