பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

By Pandeeswari Gurusamy

|

Published on 10 Nov 2026, 12:32 PM

கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ‘பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை’ தமிழக முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில், பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்ட நூல்களில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார். பெரியார் அறிவுலக நூலகத்திற்கு ‘அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் 1,800 க்கும் மேற்பட்ட நூல்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கி வரும் தனக்கு அந்த அகல்விளக்கு பதிப்பகத்தைப் பற்றி எவ்வித பரிச்சயமும் இல்லை என்றும் தனது கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

மேலும், வழக்கமாக 300 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ.350 ஆக இருக்கும் நிலையில், இந்த 300 பக்க நூலின் விலை ரூ. 1,445 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பன்னாட்டு தர புத்தக அடையாள எண் (ISBN) போலியானதாக இருக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். அதோடு, போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் திமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், சர்ச்சைக்கு உள்ளான ‘அகல்விளக்கு’ மற்றும் ‘ஃபீனிக்ஸ்’ ஆகிய இரண்டு பதிப்பகங்களைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

இதற்கிடையே, புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி பள்ளிக்கல்வித்துறை சார்பிலும், திமுக சார்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியிருந்தனர். நூல் கொள்முதல் ஊழல் தொடர்பாக விசாரிக்கவும், அது தொடர்பான கோப்புகளைச் சேகரிக்கவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாக, இன்று கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட நடைமுறைகள், கொள்முதல் ஆணைகள், புத்தகங்களின் விலை நிர்ணயம், பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel