பெரியார் அறிவுலகம்: வானுயுர்ந்த கோபுரம், மாண்புயர்ந்த தமிழ்நாடு!

By ராஜன் குறை கிருஷ்ணன்

|

Published on 9 Nov 2026, 8:29 AM

ராஜன் குறை

கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்பது வெறும் கட்டடமல்ல; ஒரு பண்பாட்டின். வரலாற்றின் பெருமைமிகு நினைவுச் சின்னம். வெகுமக்களிடையே சென்று சாக்ரடீஸ் போல கேள்விகளை எழுப்பி, சிந்தனை அலைகளை உருவாக்கிய ஒப்புற்ற பொதுமன்ற த த்துவச் செயல்பாட்டாளர் பெரியாரின் சிலைக்குப் பின்னால் அவர் பெயர் தாங்கி நிற்கும் அருமையான கோபுரம்.

அதன் ஏழு தளங்களிலும் உள்ள நூலக அடுக்குகள், அதில் உள்ல புத்தகங்கள், அறிவியல் காட்சிப்படுத்தல்கள் ஆகியவை காலம் தோறும் மாறலாம். ஆட்சியாளர்களின் அக்கறையைப் பொறுத்து மேம்படுத்தப்படலாம்; அல்லது புறக்கணிக்கப்படலாம். ஆனால் அந்த கோபுரம் நவீன தமிழ்நாட்டின் மாண்பினை வெளிப்படுத்தி என்றென்றும் நிற்கும். அதனை உருவாக்கிய திராவிட த் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெயரும் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்.

ADVERTISEMENT

பெரியார் ஏன் தமிழர்கள் போற்ற வேண்டிய தத்துவச் செயல்பாட்டாளர் என்பதை பெரும்பாலானோர், குறிப்பாக மேட்டுக் குடியினர் இன்னும் முழுமையாக உள்வாங்கவில்லை. பெரியார் இயக்கத்தவர்கள், திராவிட இயக்கத்தவர்கள் அவரைப் போற்றினாலும். பொதுவாக பல தரப்பு அரசியல் வாதிகளும் அவர து முற்போக்கான கருத்துக்களை ஏற்பதாகச் சொன்னாலும், அவருடைய முக்கியத்துவம் என்ன என்பதை சமூகம் முழுமையும் உள்வாங்கியதா என்பது கேள்வியே.

அவர் சமூக நீதி கோரியவர், சமத்துவம் கோரியவர், பெண் விடுதலை கோரியவர், கடவுள் மறுப்பாளர் என்றெல்லாம் பலவாறு அறிந்து வைத்திருந்தாலும், கூடவே பார்ப்பனர்களை வெறுத்தவர், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியவர், தமிழர் நலனுக்கு எதிரானவர் என்றெல்லாம் பலவித கருத்துக்களும் பலர் மனதை ஆக்கிரமித்துள்ளது. அவ்வப்போது அவர் மீது விஷத்தைக் க க்கும் பேச்சுக்களை பலரும் பேசுவதுண்டு. பொதுப்புத்தியில் கடவுள், மறுப்பாளர், பார்ப்பன எதிரிப்பாளர் என்று சுருக்கிப் புரிந்துகொள்ளப்படுவது இன்றும் நடக்கிறது.  

ADVERTISEMENT

பெரியாரின் சிறப்பை, இருபதாம் நூற்றாண்டில் அவர் இயக்கத்தின் தனித்துவத்தை நாம் மீண்டும், மீண்டும் எழுத வேண்டும். பேச வேண்டும். மக்கள் அனைவரும் ஏன் அவர் போற்றத்தகுந்த பெரியார் என்பதை முழுமையாக உணர அவரது அறிவியக்கத்தை அனைவரும் அவரவர் மொழியில் எழுதி விரிவாக்கம் செய்ய வேண்டும்.

தொன்னூற்று நான்கு வயதிலும் தளராமல் ஒரு வரலாற்று சாட்சியாக ஆசிரியர் வீரமணி அரும்பணியாற்றி வருகிறார். திராவிடர் கழகம் தன் பணியைத் தொடர்கிறது. அதன் இணையாக, துப்பாக்கியின் மற்றொரு குழலாக திராவிட முன்னேற்ற கழகமும் பெரியார் சிந்தனைகளை உயிரோட்ட த்துடன் வைத்திருக்கிறது. ஆனால் பொதுமன்றத்தில் பலர் இதனை ஒரு அரசியல் தரப்பாக மட்டும் கருதிவிடும் போக்கு இருக்கிறது. 

ADVERTISEMENT

இந்த கட்டுரையில் பெரியார் இயக்கத்தின் ஒரு முக்கியமான பரிமாணத்தை விவாதிப்போம். அது என்னவென்றால் இந்தியாவில் வெகுமக்கள் மனதில் பெருமளவு ஊடுறுவி நிலைபெற்றுவிட்ட வர்ண தர்ம சிந்தனை மறுப்புதான் அது. இன்று அதன் வெளிப்பாட்டை ஜாதீய ஏற்றத்தாழ்வாக பார்க்கிறோம்.

பேச்சுக்கு “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று சொன்னால்  ஜாதி மறைந்துவிடும் என்று நினைக்கிறோம். ஆனால் தமிழ் மேட்ரிமோனி என்ற திருமணத் தகவல் தளம் ஒவ்வொரு ஜாதிக்கும் தனியாக ஒரு தளத்தை வெகுசிறப்பாக நட த்திக் கொண்டுள்ளது. ஜாதி அகமணமுறை எஃகுக் கோட்டையாகவே பெரும்பாலும் விளங்குகிறது.

சரி, ஜாதிக்குள் திருமணம் செய்வது, ஜாதி பழக்க வழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுவது அவரவர் சொந்த விருப்பம், பொதுவாழ்க்கையில் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக்கொண்டால் போதும் என்பது சுதந்திரவாத தீர்வு. அதாவது ஜாதி வித்தியாசம் தனி வாழ்வில் இருக்கலாம். பொதுவாழ்வில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. ஆனால் அது அப்படி நடப்பதில்லை. ஜாதியுடன் சேர்ந்தே ஏற்றத்தாழ்வு குறித்த எண்ணமும் வந்துவிடுகிறது. இது புராணக் கதைகளில் வெட்ட, வெட்ட முளைக்கும் அசுரன் தலை போன்றது.

இந்த ஜாதிப் படிநிலை சமுக பிரச்சினையின் ஆணிவேர். சல்லி வேர் எல்லாம் வர்ண தர்ம சிந்தனையில் இருக்கிறது. மனு தர்மத்தையோ, அதையொத்த பிற தர்ம சாஸ்திர நூல்களையோ வெகு சிலரே படித்திருப்பார்கள். அதிலும் சமஸ்கிருத மொழியை நன் கு பயின்றவர்கள் படித்து பொருள் சொன்னால்தான் பிறருக்குப் புரியும். ஆனால், அந்த வர்ண தர்ம சிந்தனை பற்பல நூற்றாண்டுகளாகப் பரவி ஜாதி சமூகத்தை நிலைநிறுத்தும் பொதுப்புத்தியாக மாறியுள்ளது. முதலில் நாம் அதன் அடிப்படையை புரிந்துகொண்டால்தான், பெரியாரின் பணி எத்தகையதாக இருந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

வர்ண தர்மம் என்றால் என்ன?

வர்ண  தர்மம் என்றவுடன் பலரும் “தலையிலிருந்து பிறந்தவர்; காலிலிருந்து பிறந்தவர்” என்று ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் உருவகத்தைச் சொல்வார்கள். இது முக்கியம்தான். ஆனால் பிரச்சினையின் நுட்பம் மேலும் தீவிரமானது.

மனித உடலை இயக்கும் சக்திக்கு, உயிர் சக்திக்கு, ஆன்மா என்று பெயரிட்டார்கள். ஒருவர் இறந்த பிறகு இந்த ஆன்மா உடலிலிருந்து பிரிந்து செல்லும் என்பது கற்பனை. அந்த ஆன்மா என்னவாகும் என்று பலவிதமான கற்பனைகள் உண்டு. “ஆன்மா சாந்தியடையட்டும்” என்பார்கள். சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ போகும் என்பார்கள். அந்நியன் படத்தில் வருவது போல கருட புராண தண்டனைகளான ‘கும்பி பாகம்’ எல்லாம் எமலோகத்தில் தரப்படும் என்பார்கள். இதெல்லாம் உலகம் முழுவதும் உள்ள கற்பனைகள், நம்பிக்கைகள் போன்றவைதான். 

வர்ண தர்மம் சற்றே வித்தியாசமான கற்பனை. அது என்னவென்றால் ஆன்மா மீண்டும் பிறக்கும். என்னவாக பிறக்கும் என்பது அது செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்தது. உதாரணமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் பார்ப்பனின் ஆன்மா, பன்றியாகப் பிறக்கும். நேர்மையாக வர்ண தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் சூத்திரனின் ஆன்மாவிற்கு பிரமோஷன் போடப்பட்டு வைசியனாகப் பிறக்கும். அதே போல வைசியனுக்கு சத்திரியன் பிரமோஷன், சத்திரியனுக்கு பிராமணணாகப் பிரமோஷன். வர்ண தர்மத்தை சரியாகக் கடைபிடிக்கவில்லையென்றால் தண்டனையாக கீழ் வர்ணத்தில் பிறக்க வேண்டும். பிராமணன் சத்திரியனாக, சத்திரியன் வைசியனாக, வைசியன் சூத்திரனாகப் பிறப்பான். இது சிறிய பிரச்சினைகளுக்கு தண்டனை. பெரிய குற்றம் செய்தால் பல்வேறு மிருகங்களாகப் பிறப்பார்கள். (பார்க்க: பேட்ரிக் ஆலிவல் தொகுத்த Manu’s Code of Law [2005])

இதில் சித்திரத்தில் ஒரு முரண்பாடு இருக்கிறது. ஆன்மாவிற்கு தனிப்பட்ட குணம் கிடையாது. அது எந்த உடலில் இருக்கிறதோ, அந்த உடலின் செயல்கள். அந்த உடலில் தோன்றும் சிந்தனைகளுக்கு அது பொறுப்பல்ல. அப்படியானால் அந்த உடலின் சிந்தனைகள், செயல்களுக்கு ஆன்மாவை எப்படி மறுபிறவியில் தண்டிக்கவோ, பரிசு கொடுக்கவோ முடியும்? எந்த ஆன்மாவுக்கும் முந்தைய பிறவியில் நாம் என்னவாக இருந்தோம் என்று நினைவிருப்பதில்லை. அப்படியானால் அதற்கும், நினைவாற்றலுக்கும் சிந்தனைக்கும் தொடர்பில்லை அல்லவா? பிறகெப்படி அதனை தண்டிக்க முடியும்? (பார்க்க: பெரியாரின் பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம்)

ஆனால் வர்ண தர்மம் பிறப்பே தண்டனை என்றுதான் கூறுகிறது. ஒருவன் மிகவும் ஒழுக்க சீலனாக இருந்தால் அவன் மறுபிறப்பேயில்லாமல் தெய்வம் என்ற பரமாத்மாவுடன் கலந்து விடுவான். அல்லது அவர் அருகாமையில் நிலைபெற்றுவிடுவான். அப்படி மோட்சம் கிடைக்கும் வரை மறுபடி, மறுபடி பிறக்க வேண்டியதுதான். சில சமயம் ஏழு பிறவி என்பார்கள். சிலர் ஈரேழு பிறவி என்பார்கள். அந்த பிறவிகளில் சரியான வர்ணத்திலாவது பிறக்க வேண்டும் என்றால் இப்போதைய பிறவியில் ஒழுங்காக விதிக்கப்பட்ட வர்ண தர்மத்தை பின்பற்ற வேண்டும். அதாவது தண்டனைக் காலத்தை விதிப்படி கழிக்க வேண்டும்.

மானுட சமூக ஏற்றத்தாழ்வுகளும், வர்ண தர்மமும்

எல்லா மானுட சமூகங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அவை வம்சாவழியாக தொடரவும் செய்தன. நிலப்பிரபுவின் பிள்ளைதான் நிலப்பிரபு, குடியானவன் பிள்ளை குடியானவன். அடிமை முறையும் இருந்தது. ஆனால் அடிமைகள் விடுவிக்கப்படலாம். குடியானவன் போர்வீரனாகலாம். நிலப்பிரபுவாகலாம். எந்த நிலையில் பிறக்கிறோமோ அதே நிலையில்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் வர்ண தர்மத்தில் சூத்திரன் வைசியனாக முடியாது. சத்திரியன் பிராமணனாக முடியாது. ஏற்றத்தாழ்வு உறைநிலை பெருகிறது.

தாமஸ் பிக்கெட்டி நில உடமைச் சமூகத்தை முப்பிரிவு சமூகம் (tri-functional society) என்கிறார். பூசாரி வர்க்கம், மன்னர்கள்/பிரபுக்கள், பிற விவசாய/உழைக்கும் வர்க்கம். இந்தியாவில் நாற்பிரிவு சமூகமாக இருந்தது என்றும் கூறுகிறார். அந்த முப்பிரிவு சமூகம், முதலீட்டியம் தோன்றி வலுவடைந்த போது உடமைச் சமூகமாக உருமாற்றம் பெற்றதாகக் கூறுகிறார்.

சுருங்கச் சொன்னால் மானுட உற்பத்தியில் உருவாகும் உபரியை யார் எப்படி கையாள்கிறார்கள் என்பதே கேள்வி. நில உடமைச் சமூகத்தில் அரசர்களும். பேரரசர்களும், ஒரு பேர ரசும், இன்னொரு பேரரசும் உபரியை கைப்பற்ற ஓயாமல் போரிட்டனர். மற்றொருபுறம் உபரி உற்பத்தி வர்த்தகம் பெருக வழி வகுத்தது. வர்த்தகத்தை நிலைப்படுத்த, வங்கியில் உபரியை பணமாகச் சேமிக்கும் முறை வலுவடைந்தபோது முதலீட்டியம் தோன்றியது. ஐரோப்பாவிற்கு கீழை நாடுகளுடன் வர்த்தகம் செய்வது இன்றியமையாத தேவையாக இருந்ததால் அங்கே முதலீட்டியம் அதிகம் வலுவடைந்தது.

முதலீட்டியம் வலுவடைந்து தொழிலும், வர்த்தகமும் பெருகியபோது நில உடமை சார்ந்த உபரி பின்னுக்குத் தள்ளப்பட்டதில் மன்னரின் அதிகாரங்களும் மட்டுப்பட்டன. உடமைச் சமூகத்திற்கான சட்ட திட்டங்கள் தோன்றி, பிரதிநிதித்துவ ஆட்சி முறை, குடியரசு ஆகியவை உருவாயின. பின்னர் அவற்றை ஒருமுகப்படுத்த தேசியமும், தேசிய அரசு என்ற சிந்தனையும் தோன்றியது. பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு தொழிற்புரட்சி வேகமெடுத்தபோது மக்களாட்சி சிந்தனைகளும், தேசிய அரசு என்ற சிந்தனையும் வலுப்பெற்றன.

இந்த மாற்றங்களெல்லாம் காலனி ஆதிக்கத்தினூடாக இந்தியாவிலும் நடைபெற்றன. என்ன பிரச்சினையென்றால் இந்திய முப்பிரிவு அல்லது நாற்பிரிவு சமூகம் என்பது வெறும் சமூக இயக்கம் சார்ந்ததாக இல்லாமல், வர்ண தர்மத்தின் செல்வாக்கின் மூலம் பெரிதும் இறை நம்பிக்கை, மத நம்பிக்கை சார்ந்த தாக இருந்தது. உடமைச் சமூகம் உருவானாலும், முதலீட்டிய சமூகம் உருவானாலும் பிறப்பு – மறுபிறப்பு சார்ந்த மாற்றமுடியாத சமூக அடையாளம் தொடர்ந்தது மிகப்பெரிய முரணாக மாறியது. புதிய குடிமைச் சமூக சிந்தனைக்கும், பழைய பிறப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வு சிந்தனைக்குமான முரண் இந்திய அரசியலின் தீராத பிரச்சினையாக மாறியது.

காலனீய ஆட்சி, காங்கிரஸ் தேசியம்

காலனீய ஆட்சி ஒரு புறம் நீதிமன்றங்களை உருவாக்கியபோது வர்ண தர்ம சாத்திரங்களை அனைத்து இந்துக்களுக்கும் பொருந்தும் தனி நபர் சட்டங்களாக மாற்றியது. முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள் என அறியப்பட்ட பிற மதங்களைச் சாராதவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி அனைவருக்கும் வர்ண தர்ம சாத்திரங்கள் பொருந்தும் என்றது. உதாரணமாக ஒரு பார்ப்பனர், சூத்திரப் பெண்ணை மணந்தால் அது சட்டப்படி செல்லாது என்று 1943-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது (பார்க்க: அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை).

மற்றொருபுறம் பார்ப்பனீய கட்டுப்பாடுகளை எதிர்த்து குடிமைச் சமூகம் உருவாகவும் காலனீய ஆட்சியாளர்கள் உதவினர். உதாரணமாக மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்திரி பாய் பூலே ஆகியோர் மராத்தியத்தில் பிராமணர் எதிர்ப்பை மீறி பள்ளிகள் துவங்க காலனீய ஆட்சி துணை நின்றது. நீதிக் கட்சி போன்ற குடிமைச் சமூக அமைப்புகள் உருவாக வழி வகுத்தது. இந்த இரட்டை நிலைபாட்டிற்குக் காரணம் ஐரோப்பாவிலும் மரபுவாதம், சுதந்திரவாதம், புரட்சிவாதம் ஆகியவற்றிற்கு இடையில் இருந்த முரண்பாடுகள்தான்.

காங்கிரஸ் கட்சியின் துவக்கத்தில் ஆங்கிலம் படித்த, குறிப்பாக சட்டம் படித்த பார்ப்பனர்களே  பெரும்பாலும் பங்கெடுத்தனர். அவர்கள் உடன் கட்டை ஏறுதல், பால்ய விவாகம், விதவைகளின் சமூக விலக்கம், தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகள் ஆகியவற்றை சீர்திருத்த முன்வந்தாலும் காலத்திற்குப் பொருந்தாத வர்ண தர்ம கற்பிதங்களை, அதையொட்டி உருவான ஜாதீய அகமணமுறையை முற்றிலும் மறுதலிக்க விரும்பவில்லை. உண்மையில் அப்படி ஒரு சாத்தியத்தை மெத்தப் படித்த மேதைகளாலும் நினைத்தே பார்க்க முடியவில்லை.    

காந்தியின் வருகைக்குப் பிறகே காங்கிரஸ் பரவலாக வெகுஜன இயக்கமாக மாறியது எனலாம். அதற்குமுன்னே மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்கள் என்றாலும், ஒரு பேரியிக்கமாக அணியமாகியது அவர் வருகைக்குப் பின்னரே. அதற்கு அவர் ஒரு மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட தும் உதவியது.

காந்தியும் தீண்டாமை ஒழிப்பில் தீவிர அக்கறை காட்டினாலும், வர்ண தர்ம கற்பிதங்களை கண்டிக்க, நிராகரிக்க முன்வரவில்லை. குறிப்பாக பார்ப்பனர்களின் வைதீக மரபுகளை அவர் மறுதலிக்க விரும்பவில்லை. சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லும் பார்ப்பனர்களே கோயில்களில் பூஜை செய்ய முடியும், மரணத்தின் போதான சடங்குகளையும், திருமண சடங்குகளையும் செய்விக்க முடியும் என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. இது வர்ண தர்ம சிந்தனையை தொடர்ந்து வலுப்படுத்துவதாகவே அமைந்தது.

இன்றும் இந்த மூட நம்பிக்கையை முற்றிலும் அகற்றுவது சவாலாகவே உள்ளது. யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரங்களைச் சொல்வது புனிதமானதாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. அந்த மந்திரங்களை பலர் தவறாகவே உச்சரித்தாலும், தவறான மந்திரங்களையே சொன்னாலும் அதனை சமஸ்கிருதம் அறியாத யாரும் கண்டுபிடிக்க முடியாது. பல்வேறு சமூக ஊழல்களின் துவக்கம் இந்த மூடுமந்திரத்தில், மூட நம்பிக்கையில்தான் இருக்கிறது எனலாம். 

வர்ண தர்ம இருளகற்றிய பெரியாரின் சுயமரியாதைத் தீப்பந்தம் 

பெரியார் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நாட்டம் கொள்ளாதவர். காந்தி மக்களிடையே பணியாற்றுவதை, சமூக மாற்றத்தை முன்னெடுக்கிறார் என்பதால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்தார். அவருடைய சொல்லாற்றல். செயலாற்றலால் காங்கிரஸை தமிழ்நாட்டில் வலுப்படுத்தியுடன், அதன் மாநில தலைவராகவும் பொறுப்பேற்றார். இரண்டு நிகழ்வுகளும், ஒரு கருத்து மாறுபாடும் அவர் காங்கிரஸிலிருந்து விலக க் காரணமாயின.

கேரளாவின் வைக்கம் என்ற சிற்றூரில் கோயிலை சுற்றியிருந்த தெருக்களில் ஈழவர்களும், புலையர்களும் நுழையக்கூடாது என்ற விதியிருந்தது. இதனை எதிர்த்து கேரள காங்கிரஸ் தலைவர்கள் போராடத் துவங்கினர். பெரியாரையும் அழைத்தனர். பெரியார் போராட்ட த்தை தீவிரப்படுத்தியதில் சிறையில் அடைக்கப்பட்டார். பிரச்சினைக்குத் தீர்வு காண காந்தி வந்தார்; நம்பூதிரிகளிடம் பேசினார்.

அப்போது நம்பூதிரிகள் சொன்னதுதான் வர்ண தர்மத்தின் சாராம்சம். ஈழவர்களும், புலையர்களும் முந்தைய பிறவியில் செய்த பாவத்தால்தான் அந்த ஜாதியில் பிறந்துள்ளனர். தெய்வம் விதித்த அந்த தண்டனையை நிறைவேற்றுவது அவசியம் என்று நம்பூதிரிகள் வாதிட்டனர் (பார்க்க: பழ அதியமானின் வைக்கம் போராட்டம் என்ற நூல்).

அதே போல மற்றொரு பிரச்சினை சேரன்மாதேவி குருகுல பிரச்சினை. பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதோருடன் சேர்ந்து உணவருந்தக் கூடாது என்பது வர்ண தர்ம விதி. அதனால் அந்த தேசியப்பள்ளியில் இரு பார்ப்பன மாணவர்களுக்கு தனியான இடத்தில் உணவளிக்கப்பட்டது. இந்த நடைமுறை பொதுமன்றத்தில் அறியப்பட்டபோது பார்ப்பனரல்லோரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பெரியார் அந்த பள்ளிக்கு காங்கிரஸ் செய்த நிதியுதவியை நிறுத்தினார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பார்ப்பனர்களே கல்வியிலும், பணிகளிலும் பெரும்பாலும் வாய்ப்புப் பெறுவதை சீர் செய்து அனைத்துப் பிரிவினரும் குடிமைச் சமூகத்தில் பங்கேற்க வசதியாக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை என்று பெரியார் வலியுறுத்தினார். காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அதனால் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

பெரியார் “நான்” என்ற மொழியாலான தற்சுட்டிற்கு எந்த உள்ளடக்கமும் கிடையாது என்பதை சுட்டிக்காட்டினார். என்னுடைய ஆன்மா, என்னுடைய சிந்தனை, என்னுடைய உடல் என்றெல்லாம் சொல்லும்போது நான் என்பது ஆன்மாவோ, சிந்தனையோ, உடலோ கிடையாது என்றாகிறது. அதனால் எல்லா நான் என்ற சுயங்களும் சமமானவை. இதை உணர்வதே சுயமரியாதை.

பெரியார் வேறு பலரும் செய்யத் தயங்கிய பார்ப்பனீய சமூக ஒழுங்கின் நிராகரிப்பை தீவிரமாகப் பிரசாரம் செய்தார். ஆன்மா, மோட்சம், சொர்க்கம், நரகம், கடவுள் என அனைத்துக் கற்பிதங்களையும் கேள்விக்குட்படுத்தச் சொன்னார். தனிப்பட்ட முறையில் அவர் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை; ஆனால் பார்ப்பனீயம் என்ற சிந்தனையை, வர்ண தர்மத்தைக் கடுமையாக எதிர்த்தார்.

அது மட்டுமல்ல. வர்ண தர்ம சிந்தனை குடியரசுத் த த்துவத்திற்கு, மானுட விடுதலைக்கு முற்றிலும் எதிரானது என்பதால்தான் அவர் மிகப்பெரிய பிரசார இயக்கத்தைத் தோற்றுவித்தார். அரசியலமைப்பு சட்டம் வர்ண தர்ம நிராகரிப்பை வலியுறுத்தாதது தவறு என்று போராடினார். அரசியலமைப்பு சட்ட த்தை எரித்தார். பார்ப்பனர் மட்டுமல்லாமல் அனைத்து ஜாதியினரும் கோயில்களில் பூஜை செய்ய உரிமை வேண்டும் என்று வலியுறுத்தினார். பார்ப்பனர்களின் தனித்துவமிக்க உயர்பிறப்பு, பூசக உரிமை என்ற வேரைக் கில்லி எறியாமல், ஜாதி ஏற்றத்தாழ்வு என்ற மரத்தையோ, தீண்டாமை என்ற கிளைகளையோ வெட்டி வீழ்த்து முடியாது என்பதால் ஓயாமல் போராடினார்; பிரசாரம் செய்தார்.

அந்த போராட்டத்தினால்தான் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அரசியல் தன்னுணர்வு முதிர்ச்சியடைந்தது. திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதி மாநில சுயாட்சியை வலியுறுத்தி, இந்தியாவை கூட்டாட்சிக் குடியரசாக வடிவமைப்பதில் முன்னணியில் நிற்கிறது. இவ்வாறு மாநிலத்தை மாண்புறச் செய்த பெரியாருக்கு அமைக்கப்பட்ட கம்பீரமான நினைவுச் சின்னம்தான் பெரியார் அறிவுலகம் என்ற எழுச்சிமிகு கோபுரம். பெரியார் பற்றாளர்கள், பகுத்தறிவின் பற்றாளர்கள் அனைவரையும் பெருமிதம் கொள்ள வைக்கும் காட்சி அது. தமிழ்நாடு அதற்காக என்றும் திராவிட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டும்.  

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – தத்துவார்த்த மானுடவியல் ஆய்வாளர் - இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel