தமிழகத்தில் இன்று (நவம்பர் 9) தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (நவம்பர் 10) தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நவம்பர் 8-ந் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளிமண்டல சுழற்சியிலிருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை, தென் தமிழகம், தெற்கு கேரளா மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதையும் நிலவுகிறது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தமிழகத்தில் இன்று (நவம்பர் 9) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழை
தமிழகத்தில் நாளை (நவம்பர் 10) தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 11, 12-ல் மழை நிலவரம்
தமிழகத்தில் நவம்பர் 11-ந் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 12-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழை வாய்ப்பு எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை
மீனவர்களுக்கான தனி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.









