மேகதாது அணை.. தமிழக குழுவை அனுப்ப விஜய்க்கு டி.கே.சிவகுமார் வேண்டுகோள்!

By Mathi

|

Published on 8 Nov 2026, 11:21 PM

Mekedatu Dam- Vijay-Karnataka

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், இதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று (நவம்பர் 8) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரின் அளவு பாதிக்கப்படும் என்று தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் நவம்பர் 7-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “தமிழ்நாடு முதல்வருக்கு இந்த நாட்டின் சட்டம் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. கர்நாடகா தனது சொந்த நிலப்பரப்பில் அணை கட்டுவதற்கு உரிமை உள்ளது. தமிழ்நாட்டுக்கு 177 டிஎம்சி காவிரி நீரை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.

ADVERTISEMENT

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்குத்தான் அதிக நன்மை கிடைக்கும். இது நீரை சமநிலைப்படுத்தி சேமிக்கும் அணையாகும். சுற்றுச்சூழல் தொடர்பான நடைமுறைகளுக்காக வேறு பகுதிகளில் சுமார் 5,400 ஹெக்டேர் வன நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்ததும் விண்ணப்பிப்போம். மத்திய நீர் ஆணையம் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், “மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் எங்களுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து ஒரு குழுவை அனுப்பி வையுங்கள். இந்த அணையை நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம். சண்டையிடுவதற்கான காலம் முடிந்துவிட்டது. இனி சண்டையிட வேண்டிய அவசியமில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நாட்டின் சட்டத்தை மதிப்போம். நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். தண்ணீரைப் பகிர்ந்துகொள்வோம். இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம். காவிரி ஆறு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில் குடிநீர், விவசாயம், கால்நடைகள், தொழிற்சாலைகள் எனப் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டும்” என்றும் டி.கே. சிவகுமார் கூறினார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel