தீபாவளி இரவில் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு.. ராயபுரம், மணலியில் மோசம்!

By Mathi

|

Published on 9 Nov 2026, 12:25 AM

Diwali 2026-Chennai Air Pollution

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையின் பல பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ராயபுரம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகமாகப் பதிவாகியுள்ளது.

தீபாவளி கொண்டாட்டங்கள் நீடித்த நிலையில், சென்னையில் நள்ளிரவிலும் காற்று மாசு அதிகமாகப் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இன்று (நவ.9) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 249 ஆகவும், மணலி வில்லேஜ் பகுதியில் 219 ஆகவும் உயர்ந்துள்ளது. மணலியில் 197, அரும்பாக்கத்தில் 195, பெருங்குடியில் 174, கொடுங்கையூரில் 172, வேளச்சேரியில் 113 ஆகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக மணலி வில்லேஜ் பகுதியில் இரவு 9 மணிக்கு 164 ஆக இருந்த காற்றுத் தரக் குறியீடு, நள்ளிரவு 12 மணிக்கு 219 ஆக உயர்ந்துள்ளது. 3 மணி நேரத்தில் 55 புள்ளிகள் அதிகரித்துள்ளன.

ADVERTISEMENT

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னையின் சராசரி காற்றுத் தரக் குறியீடு 72 ஆகப் பதிவாகியிருந்தது. தீபாவளி நாளில் சென்னையின் சராசரி காற்றுத் தரக் குறியீடு 159 ஆகவும் பதிவாகியுள்ளது.

காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகள்

காற்றுத் தரக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான காற்று மாசு என்றும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமான காற்று மாசு என்றும் கருதப்படுகிறது. காற்று மாசு அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம். நீண்ட நேரம் மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தீபாவளி கொண்டாட்டங்களின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், சென்னையின் பல பகுதிகளில் காற்று மாசு அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

ADVERTISEMENT

தீபாவளி இரவில் சென்னையின் சில பகுதிகளில் காற்று மாசு கடுமையாக அதிகரித்ததாகத் தனியார் காற்றுத் தரக் கண்காணிப்பு இணையதளங்கள் தெரிவித்துள்ளன. சில தளங்களில் காற்றுத் தரக் குறியீடு 600 முதல் 1,000-க்கும் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நள்ளிரவு 12 மணி அதிகாரப்பூர்வ பதிவுகளில் ராயபுரத்தில் 249, மணலி வில்லேஜ் பகுதியில் 219 ஆகக் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. தனியார் தளங்களின் 600–1,000 அளவுகள் அதிகாரப்பூர்வ இந்திய AQI கணக்கீட்டுடன் நேரடியாக ஒப்பிடக்கூடியவை அல்ல.

நாம் தமிழர் கட்சி கோரிக்கை

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச் சூழல் பாசறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நவம்பர் 8, 2026 தீபாவளி பண்டிகையின் இரவுப் பொழுதில், சென்னை உட்படத் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் காற்றுத் தரம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைப்புகளும் அறிவியலாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்தும், அரசும் காவல் துறையும் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் முற்றிலும் தோற்றுப்போயுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விடிய விடிய வெடிகள் வெடிக்கப்பட்ட போது அரசு இயந்திரம் வேடிக்கை பார்த்ததுடன், ‘பசுமை வெடிகள்’ என்ற பெயரில் கடுமையான நச்சுப் புகையையும் அதிகச் சத்தத்தையும் வெளியிடும் வெடிகள் கட்டுப்பாடின்றி சந்தையில் விற்கப்பட்டதைத் தடுக்கவும் தவறிவிட்டது. மக்கள் நலனை விடத் தம் வாக்கு வங்கியையும் அரசியல் ஆதாயத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, சுற்றுச்சூழலின் நலனைப் பற்றிப் பேசும் அமைப்புகளைக் கேலி பேசுவதும், வெடி வெடிப்பதைத் தூண்டுவதும் ஏற்க முடியாத குற்றமாகும்.

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் அமைப்புகளும் விழிப்புணர்வு பேசுவோரும் எப்போது பேசினாலும், “இவர்கள் குறிப்பிட்ட பண்டிகைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்” என்று போலி அறிவியலையும் மதச்சார்புப் பொய்களையும் பரப்பும் வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இதனால் பாதிப்போருக்கு மருத்துவம் பார்ப்பார்களா? இயல்புநிலை மீட்சிக்கு வேலை செய்வார்களா? குறைந்தது தெருவில் கிடக்கும் கொண்டாட்ட குப்பைகளையாவது சுத்தம் செய்வார்களா?

அரசு மற்றும் அமைப்புகளைத் தாண்டி, மக்களாகிய நாமும் நம்மை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவாகும். பிற உயிர்களைப் பற்றிய அக்கறையின்மை, நாட்டு நாய்களும், பறவைகளும் சத்தத்தினால் சந்திக்கும் துயரம், தன் சொந்தக் குழந்தைகளின் எதிர்கால உடல்நலனைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கரியாக்கும் அறியாமை ஆகியவை சமுதாயப் பொறுப்பின்மையின் உச்சமாகும். பண்டிகை என்ற பெயரில் சுற்றுச்சூழலைச் சீரழிப்பதை ஒரு நாகரிக சமூகமாக நாம் இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளற்ற மரபு வழியிலான கொண்டாட்டங்களை அரசு கொள்கை அளவிலும் பரப்புரை அளவிலும் முன்னெடுக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து முதன்மை நகரங்களிலும் உண்மையான நேரடி மாசு அளவீடுகளை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதோடு, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும், அதிகச் சத்தமும் மாசும் உண்டாக்கும் நச்சு வெடிகளைத் தயாரிப்போர் மற்றும் விற்பனையாளர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel