பட்டாசு வெடிக்கும்போது கை, கண்ணில் அடிபட்டால் என்ன செய்ய வேண்டும்? தீபாவளிக்கு முன் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய முதலுதவி

By Minnambalam Desk

|

Published on 8 Nov 2026, 5:30 PM

The day after Diwali is holiday in pondicherry

தீபாவளி என்றால் புத்தாடை, இனிப்பு, பட்டாசு என்று கொண்டாட்டம்தான். ஆனால் ஒரு நிமிடக் கவனக்குறைவு பெரிய விபத்தாக மாறிவிடும். தீக்காயம், கண்ணில் அடிபடுவது, உடையில் தீப்பற்றுவது போன்றவற்றை அலட்சியம் செய்யக் கூடாது. பதறாமல் சரியான முதலுதவி செய்தால், பாதிப்பு பெருமளவு குறையும்.

வெடிக்கும் முன் பாதுகாப்பு

பட்டாசு கொளுத்தும்போது கையுறைகள் மற்றும் பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிவது நல்லது.

ADVERTISEMENT

குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்ப்பது முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு நல்லது.

ADVERTISEMENT

மருத்துவமனை, பள்ளி, முதியோர் இல்லம் அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும்.

தீக்காயம் ஏற்பட்டால்

ADVERTISEMENT

லேசான தீக்காயம் என்றால், பாதிக்கப்பட்ட பகுதியை உடனே குளிர்ந்த ஓடும் நீரின் கீழ் சுமார் 20 நிமிடங்கள் காட்டவும். இது தோலில் ஏறிய சூட்டைக் குறைக்க உதவும்.

கை, விரல்களில் காயம் ஏற்பட்டால், வீங்குவதற்கு முன்பே மோதிரம், வளையல், கடிகாரம் போன்றவற்றை உடனடியாகக் கழற்றிவிட வேண்டும்.

காயம் பெரிதாக இருந்தாலோ அல்லது தோல் கருகியிருந்தாலோ வீட்டிலேயே சிகிச்சை செய்ய முயலாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். காயத்தில் ஒட்டியிருக்கும் துணியை வலுக்கட்டாயமாக இழுக்க வேண்டாம்.

கண்ணில் பட்டாசுத் துகள் பட்டால்

கண்ணைத் தேய்க்கக் கூடாது. அப்படிச் செய்தால் கண்ணின் மேற்பரப்பில் கீறல் விழலாம். உள்ளே ஏதாவது சிக்கியிருந்தால் நீங்களாகவே எடுக்க முயலாமல், உடனே கண் மருத்துவரிடம் செல்லுங்கள். பார்வை நன்றாகத் தெரிவதுபோலிருந்தாலும் முறையான பரிசோதனை அவசியம்.

உடையில் தீப்பற்றினால்

பதற்றத்தில் ஓடிவிடாதீர்கள்; ஓடினால் காற்றில் தீ இன்னும் வேகமாகப் பரவும். உடனே தரையில் படுத்து, இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு உருளுங்கள். கனமான பருத்தித் துணியால் மூடியும் தீயை அணைக்கலாம். தீ அணைந்த பிறகும் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

செய்யக்கூடாதவை: தீக்காயத்தின் மேல் ஐஸ் கட்டி, எண்ணெய், வெண்ணெய், மஞ்சள் தூள் எதையும் தடவக்கூடாது. கொப்புளங்களை உடைக்கக் கூடாது.

அவசர உதவிக்குத் தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸுக்கு அழையுங்கள். விழிப்புணர்வுடன் பாதுகாப்பாகத் தீபாவளியைக் கொண்டாடுங்கள்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel