சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்குகளில் கைதாகிச் சிறையிலுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளதாகச் சென்னை பெருநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை பெருநகரக் காவல் துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 8 பாலியல் வழக்குகளில், முதன்மை குற்றவாளியான ஜெம் வீரமணி 8 வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த சாந்தி 3 வழக்குகளிலும், மகேந்திரசிம்ஹன் 2 வழக்குகளிலும், லாசர் 5 வழக்குகளிலும்,, கணேசன் 2 வழக்குகளிலும், சீனிவாசன், சக்திவேல், பாபு, பார்த்திபன் ஆகியோர் தலா 1 வழக்கிலும் கைது செய்யப்பட்டுப் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்குகளில் ஏற்கனவே சாட்சியாக இருந்த சிறுமி ஒருவர், தானும் ஜெம் வீரமணியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தற்போது புதிய வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், கைது செய்யப்பட்ட ஓட்டுநர் லாசரை ஒரு நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரித்ததில், பாலியல் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற ‘கேம்ரி’ (Camry) காரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டு பறிமுதல் செய்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்குத் தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்டுள்ள மொத்தம் 8 வழக்குகளில், 2 வழக்குகளுக்கான இறுதி அறிக்கையைக் வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.









