நகையை அடமானம் வைக்கப் போறீங்களா? ரிசர்வ் வங்கியின் புது நகைக்கடன் விதிகளில் இதெல்லாம் மாறியிருக்கு!

By Minnambalam Desk

|

Published on 8 Nov 2026, 9:00 PM

gold loan Finance Ministry recommendation

அவசரத் தேவைக்குப் பணம் வேண்டும் என்றால் பலரும் முதலில் ஓடுவது நகைக்கடனுக்குத்தான். இந்தக் கடன்களில் வெளிப்படைத்தன்மையைக் கூட்டவும், கடன் வாங்குபவர்களின் நலனைக் காக்கவும் ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிகளைக் கொண்டுவந்துள்ளது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இரண்டுக்கும் இது பொருந்தும். 2026 ஏப்ரல் 1 முதல் அமலில் இருக்கும் இந்த விதிகள், கடன் தொகை, தங்க மதிப்பீடு, திருப்பிச் செலுத்தும் காலம், நகையைத் திரும்பப் பெறுவது என்று பல விஷயங்களை முறைப்படுத்துகின்றன.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

நகையின் மதிப்புக்கு ஏற்ப, கடனாகத் தரக்கூடிய அதிகபட்ச சதவீதம் இப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு, தங்கத்தின் மதிப்பில் 85% வரை.

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 80% வரை.

ADVERTISEMENT

ரூ.5 லட்சத்துக்கு மேல் 75% வரை மட்டுமே.

இதனால் சிறிய தொகை கடன் வாங்குபவர்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ADVERTISEMENT

நகையின் மதிப்பை எப்படிக் கணக்கிடுவார்கள்?

இனிமேல் தங்கத்தின் மதிப்பைக் கணக்கிடும்போது, முந்தைய 30 நாட்களின் சராசரி விலை அல்லது முந்தைய நாளின் விலை இரண்டில் எது குறைவோ அதையே எடுப்பார்கள். நகையில் இருக்கும் கற்கள், ரத்தினங்கள், செய்கூலி ஆகியவற்றுக்கு மதிப்பு போடப்படாது. தங்கத்தின் உண்மையான எடையும் தூய்மையும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

நகையைத் திருப்பித் தருவதில் தாமதமானால்?

கடனை முழுமையாகக் கட்டிய பிறகு, அடமானம் வைத்த நகையை வங்கி அதே நாளில், அல்லது அதிகபட்சம் 7 வேலை நாட்களுக்குள் திருப்பித் தந்துவிட வேண்டும். இதில் தாமதமானால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 வீதம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர வேண்டும்.

ஏலத்துக்கும் கடுமையான கட்டுப்பாடு

கடன் கட்டத் தவறினால், நகையை ஏலம் விடும் முன் வாடிக்கையாளருக்கு முறையான முன்னறிவிப்பு தர வேண்டும்.

ஏலத்துக்கான தொடக்க விலை, சந்தை மதிப்பில் 90 சதவீதமாக இருக்க வேண்டும். இரண்டு முறை ஏலம் தோல்வியடைந்தால் மட்டுமே அதை 85 சதவீதமாகக் குறைக்கலாம்.

ஏலத்தில் கிடைக்கும் கூடுதல் தொகையை 7 நாட்களுக்குள் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கடன் விதிமுறைகளை வாடிக்கையாளருக்குப் புரியும் மொழியில் வழங்க வேண்டும்.

தங்கம் வாங்குவதற்காகவே நகைக்கடன் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்கும் முன்: வட்டி விகிதம், கடன் காலம், நகையைத் திருப்பித் தரும் நடைமுறை, ஏல விதிகள் ஆகியவற்றை எழுத்துப்பூர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கும் நிறுவனமும் இந்த விதிகளைப் பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel