சென்னையில் கடும் புகைமூட்டம்.. வானில் வட்டமடித்த 11 விமானங்கள்! காற்று மாசு அதிகரிப்பு!

By Mathi

|

Published on 9 Nov 2026, 6:39 AM

Chennai-Flight-Air Pollution

சென்னையில் நிலவும் கடும் புகைமூட்டத்தால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரின் பல பகுதிகளில் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களும் விமானப் பயணிகளும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாகக் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மணலி, அரும்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள நவம்பர் 9-ந் தேதி காலை 6 மணி நிலவரப்படி, மணலி கிராமத்தில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 269 ஆகவும், அரும்பாக்கத்தில் 243 ஆகவும், மணலியில் 207 ஆகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல கொடுங்கையூரில் 200, ராயபுரத்தில் 199 ஆகக் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. பொதுவாகக் காற்றுத் தரக் குறியீடு 201 முதல் 300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதன்படி, மணலி கிராமம், அரும்பாக்கம், மணலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது. கொடுங்கையூர், ராயபுரம் பகுதிகளிலும் காற்று மாசுபாடு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

காற்றில் மாசுத்துகள்கள் அதிகரிப்பதால் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

வானில் வட்டமடித்த 11 விமானங்கள்

சென்னை விமான நிலையப் பகுதியிலும் கடுமையான புகைமூட்டம் நிலவியதால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த 11 விமானங்கள் உடனடியாகத் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

ADVERTISEMENT

விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு ஓடுபாதை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போதுமான பார்வைத்தூரம் இருப்பது அவசியம். புகைமூட்டம் அல்லது பனிமூட்டத்தால் பார்வைத்தூரம் குறையும்போது, விமானங்களின் தரையிறக்கத்தை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தாமதப்படுத்த நேரிடலாம்.

15 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம்

சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதமாகின. இதனால் விமானப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் ஏற்பட்ட தாமதம் காரணமாக விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel