கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் குளத்துமேட்டுத் தெருவில் குடும்பத் தகராறு தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வேலுமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மோதலைத் தடுக்க முயன்றனர்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் போலீசார் சட்டையை பிடித்து தாக்கினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காவல் ஆய்வாளர் வேலுமணி, சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து புகழ் (23), ஜெகதீஷ் (23), ஹரிஹரன் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.









