ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி!

By Pandeeswari Gurusamy

|

Published on 10 Nov 2026, 10:44 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை அருகே ஐபோன் (iPhone) உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியைப் பராமரிக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது.

அப்போது, தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் பெல்லாரம்பட்டியைச் சேர்ந்த சாரதிக்குமார், தின்னூரைச் சேர்ந்த அக்மல், ஜம்பூத் காவேரி ஆகிய மூன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பதிவில், “டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் மூன்று உயிர்கள் பறிபோனது குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான காலத்தில் அவர்களுக்குத் தேவையான வலிமையும் தைரியமும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மாவட்ட நிர்வாகத்துடன் பேசி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு தொழிலாளியின் பாதுகாப்பும் கண்ணியமும் மிகவும் முக்கியமானது. இந்த துயரச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel