பட்டாசு சத்தத்திற்கு இணையாக கொலை சத்தம் – SSI குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Nov 2026, 4:48 PM

காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ” ஒரே நாளில் 11 கொலைகள்- தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக ​தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது தமிழ்நாட்டில்!

ADVERTISEMENT

​தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து, மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.

​”ரோட்டில் நின்றால் கொலை… தட்டிக்கேட்டால் படுகொலை!” என்னும் அளவிற்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.

ADVERTISEMENT

இதில் உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களையே ரவுடிகள் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

​”காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?”

ADVERTISEMENT

​அஇஅதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழ்நாடு காவல்துறை, இன்றைக்கு ஆளத் தெரியாத ஆச்சரியக்குறி தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.

​அரசியல் என்பது சினிமா செட் அல்ல; முதலமைச்சர் நாற்காலி என்பது ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதற்கான மேடையும் அல்ல என்பதை இந்த ‘ரீல்’ முதல்வர் விஜய் இப்போது புரிந்து கொள்வார்?

படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் குடும்பத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் நிதி உதவி என்பது போதுமானது அல்ல.

அஇஅதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, Line Of Duty-ன் போது உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இந்த அரசும், கடந்த 14.10.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், பணியின்போது துணிச்சலுடன் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளது.

தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

அந்த வகையில், செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை செய்து தமிழகத்தை பதற வைத்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.”என தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் கண்டனம்

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் இப்போது சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை தவிர்த்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel