காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை தென்கலை பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயிலில், பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதுகுறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளன.
இந்நிலையில் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகன் சன்னதியில் நேற்று முன்தினம் முதல் உற்சவம் நடைபெற்று வருகிறது.
இந்த உற்சவத்தின்போது, திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக நேற்று இரவு வடகலை – தென்கலை பிரிவினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை என இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொடர் வாக்குவாதம் காரணமாக கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் உற்சவங்கள் அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயிலுக்கு வரும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் வடகலை – தென்கலை பிரச்சினை தொடர்கதையாக நடைபெற்று வருவதற்கு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதுதான் முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
