காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவினரிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாகப் பிரச்சினை நிலவி வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகன் சன்னதியில் நேற்று முன்தினம் முதல் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக நேற்று இரவு வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கோவில் வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை என இரண்டு தரப்பினருமே பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கோவிலில் நடைபெற்ற இந்த மோதல் காரணமாக, சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். இனிவரும் நாட்களில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் தாத்தா தேசிகன் சன்னதிகளில் நடைபெறும் உற்சவங்கள் அமைதியான முறையில் நடைபெற, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
